பெண்களின் பாதுகாப்புக்கான புதிய இலவச தொலைபேசி எண் சேவையை தமிழகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.....
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தெரிவிப்பதற்கான 181 என்ற எண் சேவை டெல்லி, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது. இந்தச் சேவையை தமிழகத்தில் ஆரம்பிப்பதற்கான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கின.
இதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டரில் ஒரு பகுதியில் 181 சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செயல்படத் தொடங்கும் இந்த மையத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆரம்பித்து வைக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த சேவையின் மூலம் குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, ஈவ் டீசிங், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றைத் தெரிவிக்கலாம்.
மேலும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஸ்காலர்ஷிப் வகைகள், உடல் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனைகளையும் இந்த சேவை மையம் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இந்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பெண்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.