தற்கொலை எண்ணம் வரவேக்கூடாது - மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்

மாணாக்கர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவேக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 26, 2022, 05:04 PM IST
  • கள்ளக்குறிச்சியில் மாணவி மர்ம மரணமடைந்தார்
  • அதேபோல் விருத்தாசலத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்
  • தற்கொலை எண்ணம் கூடாதென முதல்வர் அட்வைஸ்
தற்கொலை எண்ணம் வரவேக்கூடாது - மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ் title=

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு எல்லா உரிமையும் உண்டு. குருநானக் அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. 50-வது ஆண்டை கொண்டாடுகிறபோதும் திமுக ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. குருநானக் பெயரில் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு அரசு சார்பில் அப்போது 22 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. அப்போதும் திமுக ஆட்சிதான். அப்படி வழங்கப்பட்டது வீண் போகவில்லை. அதற்கு சாட்சிதான் இந்த 50-வது ஆண்டுவிழா.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கியது எதுவும் சோடை போனதாக வரலாறு கிடையாது. அதனை நிரூபித்துக்காட்டிய இக்கல்லூரியின் பேராசிரியர்கள், நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேயராக இருந்த காலத்தில் வேளச்சேரி பகுதியில்தான் வசித்து வந்தேன். இந்த கல்லூரியைக் கடந்துதான் நான் செல்வேன். இந்த கல்லூரியில் ஒரு 7 ஆண்டுகாலம் நடைபயிற்சி செய்திருக்கிறேன். கிரிக்கெட், ஷெட்டில் கார்க் ஆடியது நினைவுக்கு வருகிறது. இந்த கல்லூரி தமிழக அரசுக்கு பல காலங்களில், குறிப்பாக கரோனா பேரிடர் காலத்தில், பெரிதும் உதவக்கூடிய வகையில், மக்களுக்கு துணை நிற்க கூடிய வகையில் உதவும் முதல் கல்லூரி குருனானக் கல்லூரி

சென்னையில் சிறு எண்ணிக்கையில் வசிக்கக்கூடிய சீக்கிய மக்கள் இங்கு சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆற்றிய கல்வி பணி என்பது பெரும்பான்மையைவிட மகத்தானதாக அமைந்திருக்கிறது. அனைவரும் சரிசமம் என்பதை நினைவில் வைத்து, அனைவரும் படிக்கக்கூடிய வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கின்ற போது எனக்கு மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துகிறவர்கள், அந்த கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக பார்க்காமல் தொண்டாக கல்வி சேவையாக கருத வேண்டும்.

Stalin

மாணவர்கள் பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதியை கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவர்கள் வளர வேண்டும்.

உங்களுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் எதிர்கொள்ள வேண்டும். மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி அதற்குரிய தண்டனையை நிச்சயமாகப் பெற்றுத்தரும். எந்த சூழலிலும் மாணவிகள் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படக்கூடாது.

மேலும் படிக்க | உடல் உறுப்புகள் தானம் மூலம் 'தனயனை காத்த தாய்'

தமிழ்நாடு மாணவமாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டும் இல்லாமல், உடல் உறுதியும் மன உறுதியும் கொண்டவர்களாக வளர வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, என்னுடைய கனவு. அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின்பணி முடிந்துவிடுவது இல்லை. பாடம் நடத்துவதோடு, ஆசிரியர்களின் பணியும் முடிந்துவிடுவது இல்லை.

குழந்தையைப் பெற்றதோடு, பெற்றோரின் பணி எப்படி முடியாதோ அதுபோல, ஆசிரியர் பணியும் முடிந்துவிடாது. மாணவச் செல்வங்களே தற்கொலை எண்ணம் கூடவேகூடாது. தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் மாணவ, மாணவிகளிடம் மனம் விட்டு பேசுங்கள். மாணவர்களும் உங்கள் பிரச்சினைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றார்.

மேலும் படிக்க | Student Death: விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News