சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற, திமுக மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மொத்தம் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக தமிழகத்தில் பெரும் சவாலாக இருக்கும் மக்களின் அன்றாட பிரச்சனை ஆனா தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திடுக என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் என்ன வலியுறுத்தப்பட்டது என்று பார்ப்போம்.
பருவமழை பொய்த்தது முன்கூட்டியே தெரிந்தும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றாமல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பற்றியே கவலை கொள்ளாமல் “கமிஷன், கரெப்சன், கலெக்சன்” என்பதில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபட்டு வரும் ஆளும் அதிமுக அரசால் தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை லாரி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் - தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபடும் காட்சிகள், குடிநீர்ப் பிரச்சினை எந்த அளவிற்கு தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அ.தி.மு.க. அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.