இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்!

திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2024, 10:40 AM IST
  • இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது.
  • முத்தலாக் சட்டம் மூலம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார்.
  • பல உரிமைகளை மீட்டு கொடுத்துள்ளார்.
இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்! title=

பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது, 'இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

வாக்களிப்பது என்பது  ஒருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்த போதும் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து இருக்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்களுக்கு இந்த பணிகளை வழங்கியதால் தான் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை சரி செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவரின் வாக்களிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது' என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், 'பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 10 கோடி நபர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய மக்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மக்கள் பலனடைந்துள்ளனர். எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார். அதுவே காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார். இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை.

இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்ணுரிமை குறித்து பேசி வருகிறார். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள நடவடிக்கை அவர் எடுக்கவில்லை. அதுவே பிரதமர் மோடி விஸா நடவடிக்கைகளை தளர்த்தி இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு வழிவகை செய்துள்ளார். அலிகார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை. இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. 

நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக்கூடாது என மோடி பேசியுள்ளார். இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் 25 கோடி ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளே தடுமாறிய போது, அந்த சூழ்நிலையை சமாளித்து இலவசமாக தடுப்பூசி வழங்கி லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் மொத்தமாக வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்கே அவர்கள் தான் காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தோல்வி பயத்தால் பாஜக இந்த கருத்தினை முன் வைப்பதாக கூறப்படுவது தவறானது. நான் உட்பட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம். ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவசியமாகும். இதில் தோல்வி பயம் எதுவும் இல்லை. பிரதமர் களத்தில் நின்று மக்களுக்காக பேசி வருகிறார். அதுவே ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. திமுகவின் முன்னாள் அமைச்சர் இலாக்கா இல்லாமல் சிறையில் உள்ளார், இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். இதுவே இந்தியா கூட்டணியின் நிலையாக உள்ளது. 

ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால் இந்தி எதிர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே தான் செல்லவில்லை. திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும்  கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை. பாஜகவில் மட்டுமே யாரும் தலைவராகவும், ஆளுநராகவும் எந்த பாகுபாடும் இன்றி ஆக முடியும். ஏன் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார்? தமிழ்நாட்டில் தான் மற்றொரு மொழியை கற்பதற்கு தடை உள்ளது. நீட்டை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த போது ஏன் முதல் கையெழுத்திட்டு அதை நீக்கவில்லை. விஜயகாந்த்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது பிரதமரும் பாஜகவினரும் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்' என தெரிவித்தார்.

மேலும் படிக்க | 'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் - இபிஎஸ் நறுக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News