ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!

DMK Reply To Pa Ranjith Allegations: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் அரசின் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் திமுக சார்பில் தற்போது அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்றார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 9, 2024, 01:15 PM IST
  • ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
  • ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
  • தமிழ்நாடு அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்! title=

DMK Reply To Pa Ranjith Allegations: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், சென்னையின் முன்னணி தலித் ஆளுமையாகவும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று இரவில் சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் அவர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது எனலாம். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அரசியல் களத்திலும் அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் பார்க்க முடிகிறது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் இந்த பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற உண்மையை போலீசார் கண்டறிய வேண்டும் எனவும் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனவும் மாயாவதி, திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். 

ரஞ்சித் சராமாரி கேள்வி

அதிலும் நேற்று இயக்குநர் பா.ரஞ்சித்தின் X தள பதிவு என்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் திமுக அரசையும், இந்த வழக்கில் போலீசாரின் விசாரணையையும் கடுமையாக கேள்விக்குட்படுத்தி விமர்சித்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடு என்ன எனவும் ரஞ்சித் கேள்வியெழுப்பியிருந்தார். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா என திமுக அரசையும் கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!

அந்த வகையில், பா. ரஞ்சித்தின் கேள்விகளுக்கு திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான சரவணன் பதில் அளித்துள்ளார். அவரது X பதிவில்,"திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது.

'அடிப்படை தெரியாதவரா தாங்கள்...!'

அண்ணன் ஆம்ஸ்டிராங்க் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்  என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித்" என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் அவர் அந்த பதிவில்,"அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு முக்கிய கேள்வி?, இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அதற்குள் போலிசார் கொலைக்கு இதுதான் காரணம் என முடிவு செய்துவிட்டார்களா என எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்? விசாரணையின் போக்கை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்லக் கூடாது என்ற அடிப்படை தெரியாதவரா தாங்கள்?

ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் வருகை 

ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கு எதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா?. தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

இந்த பரபரப்புக்கு இடையில், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்றார். சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, வில்லிவாக்கம் முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்றனர். 

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முதலமைச்சர் ஸ்டாலினிடம் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் எவ்வித பாரபட்சமும் இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினுருக்கு வாக்குறுதி அளித்தாக கூறப்படுகிறது. 

பல்வேறு கருத்துக்கள் தமிழக அரசிற்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் முன் வைக்கப்படக் கூடிய நிலையில் முதல்வர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வருகை தந்தது முக்கியத்துவம் பெறுகிறது. 

மேலும் படிக்க | யார் இந்த அருண் ஐபிஎஸ்? சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News