சென்னை: கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.
இதனையடுத்து நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதா? என மிகவும் ஆவேசமாக பேசினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில் பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை அமைச்சர் மீறியுள்ளதால், ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியலுக்கு வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும். கமலுக்கு அந்த அருகதை துளியும் கிடையாது. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்கவேண்டும் என நான் கூறிய கருத்தை திரும்ப பெறுவேன். ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார்.
என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு அவர் என்ன குடியரசு தலைவரா? அல்லது ஆளுநரா? கமல் இப்படி பேசுவதற்கு காரணம் என்ன? அவர் ஐ.எஸ். அமைப்பிடம் பணம்வாங்கி விட்டாரா? என கேள்வியும் எழுப்பினார்.