தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜுவைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வின் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "அதிமுக பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் இருந்த கூட்டணி தற்போது நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே, வார்டுகள் பிரிக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கான வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக-வை பொறுத்தவரை வாக்களிக்கும் மக்கள்தான் எஜமானர்கள். ஆனால் திமுக கார்ப்பரேட் நிறுவனம் போன்றது. அதன் காரணமாவே பழம்பெரும் அரசியல்வாதி, முன்னாள் MLA பழ.கருப்பையா அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறுவரையறை செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. தேர்தலுக்கு தடை இல்லை என்று சொன்ன பின்புதான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதன் பின்னரும் திமுக குறைகூறுவது மக்களைச் சந்திக்கப் ஆவர்கள் பயப்படுவதை காட்டுகிறது... விக்ரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெற்ற தோல்வி அவர்களை இன்றும் ஜூரத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக-வினருக்குத் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஆகையால் மக்கள் மன்றத்தைச் சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குடியுரிமை சட்டத்தை குறித்து பேசிய அவர்., குடியுரிமைச் சட்டத்தினை அதிமுக ஆதரித்தாலும், இச்சட்டத்தினால் ஈழத்தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் என்ற நிலை வந்தாலும் கூட, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை முன் வைத்துள்ளோம். வரும் 19-ஆம் தேதி பிரதமரை, தமிழக முதல்வர் சந்திக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.