பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

Madurai Alagar Festival: லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில்  கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2024, 11:10 AM IST
  • வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.
  • பக்தர்கள் பெரும்திரளாக பங்கேற்றனர்.
  • பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! title=

Madurai Alagar Festival: ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார். பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்து கொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார். இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில்  எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். 

வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள்  மண்டகப்படிகளில்  கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.  ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார். முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர். பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News