திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை -உயர்நீதிமன்றம்!

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

Last Updated : Jan 3, 2019, 12:53 PM IST
திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை -உயர்நீதிமன்றம்! title=

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க இயலாது என கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு தொகுதி காலியாகி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி திருவாரூர் தொகுதிக்கு வருகிற  பிப்., 2-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ஆம் நாள், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வெளியான அறிவிப்பின் படி, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் அலுவலரான திருவாரூர் கோட்டாச்சியரிடன் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

திமுக, அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த கட்சிகளுக்கு முதன்மையாக நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீது போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டி ராஜா-வின் மனு திருவாரூர் தேர்தலை தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News