Rahul Gandhi Speech In Tirunelveli: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மக்களவை தொகுதிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க, திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த பொதுகூட்டத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, ராகுல் காந்தியை வரவேற்று பேசினார். 'தேசத்தின் நாயகன்' என்ற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் பிரச்சார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. ராகுல் இதனை வெளியிட கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு ஆகியோர் அதனை பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு ஓர் அற்புத கண்ணாடி
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் உரையாற்றினார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அதனை தமிழாக்கம் செய்தார். ராகுல் காந்தி தனது உரையில், "இந்தியாவை புரிந்து கொள்ள தமிழகத்தை பார்க்கிறேன். ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடியாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டை மனமார நேசிக்கிறேன். தமிழக மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன்.
மேலும் படிக்க | அமேதி மக்களின் விசுவாசத்தை சந்தேகிக்கிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி காட்டம்
தமிழகத்தின் மக்கள் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம்,மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழை பேச முடியவில்லை என்றாலும் தமிழின் நூல்களை படித்திருக்கிறேன். பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் என பல தலைவர்களை தமிழ்நாட்டு மக்களான நீங்கள் தந்திருக்கிறீர்கள். இந்த கூட்டத்தின் முழு நேரத்திலும் அவர்களைப் பற்றி பேச முடியும். சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுகே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். இதனால்தான், இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.
நடப்பது சித்தாந்த போர்...
அதானி பிரதமருக்கு நெருக்கமாக இருப்பதால் நாட்டின் அனைத்து விதமான மின்சாரம் தயாரிக்கும் வசதியும் அவரே வைத்து கொண்டுள்ளார். நாட்டில் இருக்கும் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது. இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் இருந்துதான் பண்பாட்டு தரவுகளை எல்லோரும் படிக்க முடியும். நான் இங்கு வரும்போதெல்லாம் மக்கள் அன்பை பொழிந்திருக்கிறார்கள். இது ஒரு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு.
இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியைப் போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. மோடி ஒரே நாடு, ஒரே மொழி, என சொல்கிறார். இந்தியாவில் உள்ள பிற மொழிகளை விட தமிழ் எந்த வகையிலும் குறைந்தது இல்லை. இந்தியாவில் பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒன்றைவிட மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல.
விவசாயிகளை புறக்கணிக்கும் மோடி
தமிழ் வெறும் மொழியல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ், வங்காளம் போன்ற நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. நாட்டின் எல்லா மொழிகளும் புனிதமானது என கருதுகிறோம். ஆனால், அவர்களின் சித்தாந்தம் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என இருக்கிறது.
அந்த சித்தாந்தத்தின் முடிவு என்னவென்றால், இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதுதான். ஆங்கிலேயர்கள் இருக்கும்போதைவிட இப்போது இந்தியா சமச்சீரற்ற முறையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள், ஆனாலும் பிரதமர் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. அதே பிரதமர், மிகப்பெரும் பணக்காரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்.
பெண்களுக்கு ரூ.1 லட்சம்
மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும் தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். ஏழைப் பெண்களுக்காக காங்கிரஸ் ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குடும்பத்தின் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1 லட்சம் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கும் பாஜக
மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நானும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம். மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது.
நாட்டின் வருவாய் புலனாய்வு துறை சிபிஐ வருமானவரித்துறை முன்னேற்றவைகள் மத்திய அரசின் கையில் எதிரிகளை அழிக்கும் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறது. தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
பாஜக மீதான குற்றச்சாட்டுகள்
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது. தமிழக மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மோடி நாட்டின் பொருளாதர வசதி மீது முழுமையான ஆக்கிரமப்பை வைத்ததுள்ளார். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்கிறார். இந்தியாவின் தாய் ஜனநாயகம் என போற்றப்பட்ட நாள் மாறி ஜனநாயகம் அழியும் நாள் நடந்து வருகிறது.
காங்கிரஸ் என்ன செய்யும்?
இந்தியா கட்சி கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் மக்களுக்கு செய்ய போகிறது என்பதை தெரிவிக்க உள்ளேன். மத்திய அரசிடம் உள்ள 30 லட்சம் காலிப்பணியிடங்களையும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் நிரப்பப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு வேலை கிடைப்பதற்கான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறு முதல் ஒரு வருடம் வரை தனியார் நிறுவனங்களிடம் வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தனி சட்டம் இயற்ற இருக்கிறோம். தகுதி வாய்ந்த இளைஞர், இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்றார். 30 நிமிடங்கள் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழில் வணக்கம் கூறி தனது உரையை முடித்தார்.
மேலும் படிக்க | பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கோவையில் வழக்கு பதிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ