தர்மபுரி: நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது.
தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது எனவும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் அதிமுக+பாஜக கூட்டணியும், திமுக+காங்கிரஸ் கூட்டணியும் 38 மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றிருந்தது. அந்த கட்சிக்கு ஏழு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாமகவின் நிறுவனர் ராமதாஸின் மகன் முன்னால் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.
இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் பாமக வேட்பாளர் அன்புமணி முன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்து சுற்றின் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் 28,149 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.