தனித்து களம் காணும் கட்சிகள்: சிதறும் வாக்கு வங்கி

நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பா.ம.க என முக்கிய கட்சிகள் இம்முறை தனித்து களம் இறங்குவதால் வாக்குவங்கி அதிகமாக சிதறுண்டு போக வாய்ப்புள்ளது.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Vijaya Lakshmi | Last Updated : Sep 16, 2021, 11:14 AM IST
தனித்து களம் காணும் கட்சிகள்: சிதறும் வாக்கு வங்கி title=

உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், பல கட்சிகளிடம் இருந்து தனித்து போட்டி அறிவிப்பு வெளிவருவதுதான்.

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக (DMK) அணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அதிமுக (AIADMK) அணியில் பா.ஜ.க (BJP), பா.ம.க (PMK) உள்ளிட்ட கட்சிகளும், அமமுக (AMMK), தேமுதிக ஒரு அணியாகவும், மநீம, சமக ஒரு அணியாகவும் நாம் தமிழர் தனியாகவும் போட்டியிட்டன. அதில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்ததால் மற்ற கூட்டணிகள் வெடித்து சிதறிவிட்டன.

ALSO READ | AIADMK vs PMK  பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி

முதல் தடாலடியாக உள்ளாட்சித் தேர்தல் (Local Body Election) அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை பா.ம.க வெளியிட்டது. அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தோல்வியுற்றதால் இந்த முடிவை அவர்கள் எடுத்ததாக பேசப்படுகிறது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கி பா.ம.க-வுக்கு உள்ளதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கனி கைகூட, அதிமுக-வை சத்தமில்லாமல் கழற்றிவிட்டது பா.ம.க.

அடுத்ததாக தனித்துப் போட்டி அறிவிப்பினை தேமுதிக வெளியிட்டது. கடந்த தேர்தலில் அதிமுக, திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லாததால் கடைசி நேரத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவோடு கை கோர்த்தது விஜயகாந்த் கட்சி. ஆனால் 0.43% என்ற அதள பாதாளத்தில் போய் விழுந்ததால் இந்த முறை தனித்து போட்டி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். தேமுதிக-வும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செல்வாக்கான கட்சியாக பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியினர் இப்போதும் அதே முடிவையே எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களது வாக்குவங்கி உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2021 தேர்தலில் தோல்வியடைந்தாலும் 6.89% வாக்குகளை நாம் தமிழர் பெற்றது. மேலும் தனது பலத்தை நிரூபிக்க சீமான் இந்த முறையும் தனித்து களம் காண்கிறார்.

அடுத்த அதிர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் தற்போது தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் சமக, ஐ.ஜே.கே-வுக்கு தலா 40 சீட்டுகள் ஒதுக்கியதை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை. விளைவாக கட்சி தான் கொண்டிருந்த வாக்கு வங்கியையும் இழந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், குமரவேல், சந்தோஷ் பாபு ஆகியோர் பொறுப்பில் இருந்து விலகினார்கள். இது கட்சியின் அடித்தளத்தை அசைத்து பார்த்திருக்கிறது. தற்போது கட்சியை பலப்படுத்திவரும் கமல்ஹாசன், பரீட்சை முறையாக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.

திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதாலும் தற்போது அரசின் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாலும் இந்த முறை காங்கிரஸ், மதிமுக, விசிக என அதே கூட்டணியோடு தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிமுக பொது செயலர் வைகோ அதனை உறுதியும் படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போதுவரை பதில் பேசாமல் இருப்பது பா.ஜ.க மட்டும்தான். அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க-வும் விலகிவிட, பா.ஜ.க தொடர்ந்து கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து களம் காணுமா? என்பதை அதன் தலைவர் அண்ணாமலைதான் விளக்க வேண்டும். 

நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பா.ம.க என முக்கிய கட்சிகள் இம்முறை தனித்து களம் இறங்குவதால் வாக்குவங்கி அதிகமாக சிதறுண்டு போக வாய்ப்புள்ளது. பெரிய கட்சிகளான திமுக, அதிமுக-வின் வாக்குகள் இதனால் சிதறும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் தனி செல்வாக்கு மிக்கவர்களே வெற்றிபெருவார்கள் என்பதால் இதனை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

ALSO READ | 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News