பண்டிகை நாட்களில் தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் பல இடங்களில் மதுபான கடைகளும் ஒன்று... வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பண்டிகை தினங்களில் மது விற்பனை ஆவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ₹475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் TASMAC மதுபான கடைகள் தமிழகத்தில் மட்டும் 4,800 உள்ளன. இவற்றில் சராசரியாக தினமும் ₹80 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. ஆனால் அதே கடைகளில் விடுமுறை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ₹100 கோடி வரை மதுவகைகள் விற்பனையாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த சனி அன்று துவங்கி நாளை வரை, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நேற்று மட்டும் TASMAC கடைகளுக்கு விடுமுறை. தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 12-ஆம் நாள் துவங்கி 15-ஆம் தேதி வரை ₹475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளது.
பொங்கல் விற்பனையின் படி தமிழக TASMAC-ல் கடந்த 12-ஆம் தேதி -105 கோடி, 13-ஆம் தேதி - 120 கோடி, 14-ஆம் தேதி - 110 கோடி, 15-ஆம் தேதி 140 கோடி என 100 கோடி வரிசையில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.