சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழகத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலையை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்த கொலை சம்பந்தமாக காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.
உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே போல உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், நிவாரணமாக ரூபாய் 1 கோடி தரவும் தமிழக அரசு அறிவித்தது. இது அந்த குடும்பத்தினருக்கு ஓரளவுக்கு ஆறு தலை அளித்திருக்கிறது.
தமிழக காவல்துறையினர் தங்களது பணியை இரவு பகல் பாராமல் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அவ்வப்போது குற்றச்செயல்கள் நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
குற்றங்கள் நிகழக்கூடாது என்றால் அதில் ஈடுபடுவோர் தான் மனம் மாற வேண்டும். அப்படியே குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத்தந்தால் தான் குற்றங்கள் படிப்படியாக குறையும். மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளும் அவ்வப்போது நடைபெறுகிறது. சில சமயம் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தலைதூக்க முயற்சிக்கிறது.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை இன்னும் கடுமையாக்கி காவல்துறையின் சிறப்பான நடவடிக்கையை இன்னும் துரிதப்படுத்தி, வன்முறை நிகழாமல் இருக்கவும், தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தை ஒடுக்கியும் மாநிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.