தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பு!!
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக செயற்குழுவில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகே, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு ஏற்கனவே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிதாக பெரிய பீடம் அமைத்து அறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் திருவள்ளுவர் சிலைகளை ஒன்றாக நிறுவப்பட இருக்கிறது.
இந்நிலையில், தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா வருகிற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்புவிழா!". "அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்பு". ‘எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி - உலகத் தமிழர்களின் இதயங்களில் கொலுவீற்றுள்ள தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை அண்ணா அறிவாலயத்தில் 16-12-2018 அன்று திறக்கப்படவுள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற 22 ஆம் தேதி டெல்லி செல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.