கருணாநிதி நலமுடன் உள்ளார். அவரை பற்றி எழும் வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி ட்ரக்கியாஸ்டமி என்ற உணவுக்குழாய் மாற்றம் செய்வதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். இதையடுத்து, சிகிச்சைக்கு பின்னர் அவர் அன்று மாலை மீண்டும் வீடு திரும்பினார்.
இதையடுத்து, இன்று மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி-க்கு உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வதந்தி குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அவர், "கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது வெறும் வதந்தி தான். அவருக்கு சிறு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். எனவே பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை" என்று கூறினார். இதனால் தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும், ஓ.பி.எஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்; "ஓ.பி.எஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விரைவில் ஜெயிலில் இருப்பார். அவரைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஜெயிலுக்குபோவார். அவர் ஏராளமான மோசடிகளை செய்துள்ளார். இது தொடர்பாக தான் நான் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளேன்" என்றார்.
ஓ.பி.எஸ் டெல்லி சென்றது குறித்து கேள்வி எழுப்புகையில், "முதலில் தனிப்பட்ட ஒரு நபருக்காக அரசின் ஏர் ஆம்புலன்ஸ் எப்படி அனுப்பப்பட்டது? " என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நின்றால் ஆதரவு தெரிவிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை" என பதிலளித்தார்.