சென்னையில் உள்ள தனியார் மருத்துவனமையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை நேற்று திடீரென்று கவலைக்கிடமானது. உடல்நிலையில் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காவேரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதனையடுத்து காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் எழுந்து வா தலைவா.... மீண்டு வா தலைவா.... என்ற கோசத்துடன் திமுக தலைவர் கருணாநிதிக்காக கண்ணீர் மல்க நிற்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்த மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து பிராத்தினை செய்து வருகின்றனர்.
பெரும்பாலான தொண்டர்கள் தலைவர் குறித்த நல்ல செய்திக்காக விடிய விடிய காத்திருந்தனர். இந்த நிலையில் இரவு சென்ற தொண்டர்கள் மீண்டும் இன்று காலை முதல் காவேரி மருத்துவமனை முன் குவியத்தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.