கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்தான், கடந்த 17ம் தேதி, பள்ளி முன்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி, பள்ளி வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்தும் கொளுத்தினர்.
இந்த நிலையில் பள்ளி வளாகமே தீக்கரையானது. நாடு முழுவதும் அந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து கைது செய்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாகக் கலவரத்தில் ஈடுபட்டதாக 20 சிறார்கள் உள்ளிட்ட 128 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 128 பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், 20 சிறார்கள் செஞ்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது. மீதமுள்ள 108 பேருக்கு ஆகஸ்டு 1-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், போராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் மூலம் அழைப்பு விடுத்த மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்துச் சென்ற மேசை, டேபிள், மின்விசிறி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திரும்பப் பள்ளி வளாகத்தில் வைக்குமாறு காவல்துறையினர் தண்டோரா மூலம் அறிவித்திருந்தனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு
தண்டோரா மூலம் அறிவித்திருந்த நிலையில் பொருட்கள் எடுத்துச் சென்ற பொதுமக்கள் டேபிள்,சேர் மின்விசிறி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை இரவோடு இரவாக சாலையோரமாக வீசி சென்றுள்ளனர். மேலும் கலவரத்தின் போது வேடிக்கை பார்க்க சென்ற நபர்கள் கொண்டு சென்ற நகைகள், சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், சாலையோரமாக வீசி சென்ற பொருட்களை மீட்ட காவல்துறையினர், கும்பக்கொட்டாய் மாரியம்மன் கோயில் வளாகத்தில் கொண்டு சென்று வைத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்திப்பட்டுள்ளனர். மேலும், திருடி செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் காவல்துறையினரின் கையில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ