முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்தது. ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடமும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணையை நடத்தியது.
இதில், சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக ஆணையத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.
இந்த சூழலில் 90 சதவீத விசாரணை நிறைவடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டுக்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கியது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழவை விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேரை உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வாக்குமூலத்தை கொடுத்தனர். பின்பு, அப்பல்லோ மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ஜி.யு.போப் குறித்த சர்ச்சை பேச்சு : ஆளுநருக்குக் குவியும் கண்டனங்கள்
இதன் பின்பு நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தினார். ஆனால் எயம்ஸ் மருத்துவ அறிக்கை கிடைக்காததால் அது தாமதமானது. நிலைமை இப்படி இருக்க கடத ஆகஸ்ட் 4ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்தது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை பணிகள் முடிந்துவிட்டதகவும், அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் அலுவலகத்தில் நேரம் கேட்டு விசாரணை ஆணையம் கடந்த 22ஆம் தேதி கடிதம் அளித்தது. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று நாட்கள் பயணமாக கோயம்புத்தூர் உள்பட மாவட்டங்களுக்கு சென்றதால் நேரம் கிடைக்கவில்லை.
இதனையடுத்து சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அறிக்கை அளிக்க நேரம் கொடுப்பட்டுள்ளதால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 500 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சனிக்கிழமை முதலமைச்சரிடம் அளிக்கவுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ