சென்னை: அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா அவர்களின் உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக மக்களின் ஏகோபித்த அன்பை பெற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் கதறி அழுதார்கள்.
நேற்று அதிகாலை ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி செலுத்தி முடிந்ததும் மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மூடப்பட்டு முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை முப்படை வீரர்கள் சுமந்து சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றினர். அங்கிருந்து மாலை 4.28 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தின் முன்னால் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என முக்கிய நிர்வாகிகள் நடந்து சென்றனர். ஜெயலலிதா உடல் மீது அ.தி.மு.க. தொண்டர்கள் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் மாலை 5.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு வந்து நின்றது. பின்னர், வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் இறக்கப்பட்டு, உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. முப்படை வீரர்கள் அவரது உடல் இருந்த பெட்டியை சுமந்து சென்றனர்.
எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. குழிக்கு வெளியே ஜெயலலிதாவின் உடலை வைப்பதற்காக சந்தன பேழை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் "புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா" என்று எழுதப்பட்டு இருந்தது.
பின்னர், ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதில் சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் ஆகியோர் கலந்துகொண்டு இறுதிச் சடங்குகளை செய்தனர். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு சந்தன பேழைக்குள் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
பின்னர், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.