சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவராத நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு போராட்டங்களை நடத்தியதால், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து 23-ம் தேதியன்று நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. நாட்டு மாடு இனங்களை காக்கும் பொருட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.