யோக கலாச்சாரத்தில் இருப்பவர்களுக்கு ‘ஆதியோகி’ என்னும் வார்த்தை புதிது அல்ல. ஆனால், சாமானிய மக்கள் மத்தியில் ‘ஆதியோகி’ என்னும் பெயர் 2017-ம் ஆண்டில் தான் பிரபலம் அடைய தொடங்கியது. இந்தப் பெயர் வெறும் ஐந்தே ஆண்டுகளில் ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்துவிட்டது.
‘ஆதியோகி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? யார் அவர்? எதற்காக அவரை உலகம் கொண்டாடுகிறது? என பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இந்த கட்டுரை. ஐ.டி வேலைக்காக நம்முடைய இந்திய இளைஞர்கள் எப்படி அமெரிக்காவிற்கு செல்கிறார்களோ, அதேபோல், ஆன்மீக தேடலுடன் இருக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் அனைவரும் வந்து செல்ல விரும்பும் தேசமாக நம்முடைய பாரத தேசம் உள்ளது.
‘யோகா’ என்னும் உள்நிலை விஞ்ஞானம் நம் பாரத தேசத்தில் தான் தோன்றியது என்பதையும், பாரதம் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை ‘யோகா’ என்பதையும் ஐ.நா அமைப்பே அங்கீகரித்துள்ளது. ‘யோகா’ என்பது உடலை வளைத்து செய்யும் உடற்பயிற்சி அல்ல; நம் உயிரை அறியும் விஞ்ஞானம் என்ற புரிதல் சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலகமே போற்றும் இந்த விஞ்ஞானம் நம்முடைய புனிதமான இமயமலையில் தான் பிறப்பெடுத்தது.
இந்து கலாச்சாரத்தில் கடவுளாகவும், யோக கலாச்சாரத்தில் யோகியாகவும் வணங்கப்படும் சிவன் தான் இந்த யோகாவை உலகிற்கு வழங்கியவர். அவர் தான் உலகில் தோன்றிய முதல் யோகி என்பதால், அவர் ‘ஆதியோகி’ என அழைக்கப்படுகிறார். சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அவர், தான் உணர்ந்த உள்நிலை விஞ்ஞானத்தை சப்த ரிஷிகளுக்கு பரிமாறி ‘ஆதிகுரு’ வாகவும் அறியப்படுகிறார்.
அகத்தியர் தென்னிந்தியாவிற்கும் மற்ற ரிஷிகள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இந்த யோக விஞ்ஞானத்தை பரிமாறினர். நம் உடலில் நாடிகளின் வழியாகவே சக்திகள் பயணிக்கிறது. இந்த நாடிகள் ஒன்று சேரும் இடங்களை யோக கலாச்சாரத்தில் இருப்பவர்கள் சக்கரங்கள் என பெயரிட்டு அழைக்கின்றனர். அந்த வகையில் நம் உடம்பில் மொத்தம் 112 சக்கரங்கள் உள்ளன.
மேலும் படிக்க | ஈசன் அமர்ந்த மலை! தென்கைலாயம் எனும் வெள்ளியங்கிரி மலை!
அதை அடிப்படையாக கொண்டு ஆதியோகி 112 விதமான யோக வழிமுறைகளை சப்த ரிஷிகளுக்கு பரிமாறினார். இதை குறிக்கும் விதமாகவே, கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதியோகியான சிவன் இமயமலை மட்டுமின்றி பாரத தேசத்தின் பல இடங்களுக்கும் சென்றதை அந்தந்த இடங்களின் புராணங்கள் மற்றும் வரலாற்று கதைகள் மூலமும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் அவர் வந்து சில மாதங்கள் தங்கி சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதனால் தான் அந்த மலை ‘தென் கயிலாலயம்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.மிகவும் சக்திவாய்ந்த வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் தியான நிலையில் அமர்ந்து இருக்கும் ஆதியோகியின் அழகிய திருவுருவம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆதியோகியை தரிசிப்பதற்காக அனைத்து நாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கு வருகின்றனர். நீங்கள் அவரை கடவுளாக பார்த்தால், நாம் சாதாரண மனிதர்கள் அவர் அடைந்த உச்ச நிலையை நம்மால் அடைவது சாத்தியம் இல்லை என தேங்கி போய்விடுவோம். ஆனால், அவர் இம்மண்ணில் நம்மை போல் வாழ்ந்த ஒரு யோகி என்று பார்த்தால் அவர் அடைந்த பேரானந்த பரவச நிலையை நாமும் அடைய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.
உடல், மனம், உணர்ச்சி என அனைத்து கட்டுப்பாடுகளையும் கடந்து ‘முக்தி’ (விடுதலை) நிலையை நோக்கி பயணிக்க விரும்பும் மனிதர்களுக்கு மாபெரும் உந்து சக்தியாக வீற்று இருக்கிறார் ‘ஆதியோகி’!
மேலும் படிக்க | பழனி மாசி திருவிழா: பிப்.28ஆம் தேதி மாசித்தேரோட்டம் விழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ