புதுடெல்லி: நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ள நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் ப. சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறியது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரான சிபிஐ அதிகாரிகள், நேற்று மாலை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால், 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரம் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். மீண்டும் இன்று காலை ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு சென்றது. அப்பொழுது அவர் அங்கு இல்லை. மீண்டும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை, அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்பொழுதும் அவர் அங்கு இல்லை.
இதனால் மீண்டும் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பிய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்தது அமலாக்கத் துறை அமைப்பு.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை எப்பொழுதெல்லாம் அழைத்ததோ, நான் விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். நான் ஏதோ தவறு செய்துவிட்டதாகவும், தப்பி ஓடி ஒளிந்துக் கொண்டதாகவும் ஒரு தோற்றத்தை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ள நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதை நீதிமன்றம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாத நிலையில், முன்ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது "சட்டவிரோதமானது மற்றும் அநியாயமானது" என்றும் சிதம்பரம் கூறினார்.