வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 69,000 தமிழரை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: PMK

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை. 

Last Updated : Sep 18, 2020, 11:43 AM IST
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 69,000 தமிழரை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: PMK title=

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை. 

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "கொரோனா அச்சம் (Corona pandemic) காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்த வெளிநாடு வாழ் தமிழர்களில் பாதி பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும், இன்னும் 68,000 பேர் அழைத்து வரப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு திரும்ப விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும் அவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வேதனையளிக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலை இழந்தவர்களும், தாயகம் திரும்ப விருப்பியவர்களும்  பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக  1.48 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் கடந்த 4 மாதங்களில் 79,000 தமிழர்கள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள சுமார் 69,000 தமிழர்கள் சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தனிமை முகாம்களில் வாடி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

துபாய், சார்ஜா உள்ளிட்ட பிராந்தியங்களை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து மட்டும் தாயகம் திரும்ப 66,267 பேர் விண்ணப்பித்த நிலையில், சுமார் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 25,572 பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள 40 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் இன்னும் தாயகம் திரும்ப முடியவில்லை. அவர்கள் எப்போது தமிழகத்திற்கு விமானத்தில் அழைத்து வரப்படுவர் என்பது குறித்த விவரங்களும் இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

ALSO READ | குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% ஆக குறைப்பு!!

சிங்கப்பூரில் சுமார் 7,000 பேர், சவுதி அரேபியாவில் சுமார் 7,500 பேர், கத்தாரில் சுமார் 6,000 பேர்  தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஓமன், பக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் அதிகபட்சமாக 2000 பேர் வரை வாடிக் கொண்டிருக்கின்றனர். உலகின் அனைத்து நாடுகளும் பிற நாடுகளில் தங்கியிருந்த தங்கள் நாட்டு மக்களை அதிகபட்சமாக இரு மாதங்களில் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்று விட்டன. இந்தியாவில் கூட, பிற மாநிலங்களைச் சேர்ந்த வெளிநாடு இந்தியர்கள்  கிட்டத்தட்ட தாயகம் அழைத்து  வரப்பட்டு விட்டனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இன்னும் அழைத்து வரப்படவில்லை. தமிழர் விஷயத்தில் மட்டும் பாகுபாடு காட்டப்படுவது நியாயம் இல்லை.

 கொரோனா அச்சம் காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்தவர்கள் எவரும் வசதியானவர்கள் அல்ல. அவர்கள் அனைவருமே வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக பிழைப்பு தேடிச் சென்றவர்கள். கொரோனா  வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் அவர்கள் அனைவருமே வேலை இழந்து விட்டனர். எந்த வருமானமும் இல்லாமல் வாடுபவர்களை 4 மாதங்களாக வெளிநாட்டில் தனிமை முகாம்களில் தவிக்க விடுவது எந்த வகையிலும் அறம் இல்லை. வெளிநாடுகளில் தவிப்பவர்களில் அரசு முகாம்களில்  தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும், அந்தந்த நாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு, உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. முகாம்களுக்கு வெளியில் இருப்பவர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் அவர்களின் நிலையை எண்ணி, தமிழகத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தில் வாடிக் கொண்டுள்ளனர்.

ALSO READ | இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம், பின்வாங்க மாட்டோம்: EPS

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் 69 ஆயிரம் பேரில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள்  வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்த நாடுகளுக்கும், தமிழகத்திற்குமான வான்பயண நேரம் சுமார் 3 மணி நேரம் மட்டும் தான். சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான பயண நேரமும் கிட்டத்தட்ட அதே அளவு தான் இருக்கும். மத்திய அரசு நினைத்தால் அதிகபட்சமாக 3 நாட்களுக்குள் அனைத்து தமிழர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வர முடியும். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள நிலையில், வெளிநாடு வாழ் தமிழர்களை அழைத்து வருவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. எனவே, வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும்.

Trending News