''நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை" என்று எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான கருணாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவுக்குப் பின்னர் ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.,க்களுக்கு சசிகலா தரப்பில் ரூ. 2 கோடி முதல் ரூ. 10 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
சென்னையில் இருந்து கூவத்தூர் அழைத்து செல்லப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு முதலில் ரூ. 2 கோடி என்று பேசப்பட்டு பின்னர், இது ரூ. 10 கோடி வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது. திருபுவனம் எம்.எல்.ஏ., கருணாஸ்சுக்கு ரூ. 10 கோடி வழங்கப்பட்டதாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ., சரவணன் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்தை மறுத்து கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்:-
‘கூவத்தூரில் எனது நண்பரின் விடுதியில் தங்கியிருந்த நான் கூட்டம் என்றதால்தான் அவர்களோடு கலந்துகொண்டேன். எனது தொகுதியில் கண்மாய் தூர்வார வேண்டும். அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்குங்கள், என் தொகுதியில் அனைவருக்கு குடிநீர் கிடைக்க உதவுங்கள் என்றுதான் அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். தவிர எனது தேவைக்காகவோ, எனது அமைப்பின் தேவைக்காகவோ யாரிடமும் நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை. அப்படியிருக்க நான் பணம் வாங்கியதாக அபாண்டமான பொய்யை, எம்.எல்.ஏ., சரவணன் கூறியுள்ளார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.