Omni Bus Strike: பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டு பலரும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரிங்களில் இருந்து மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர். தற்போது இன்றுடன் விடுமுறை தினங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அனைவரும் இன்று ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று மாலை 6 மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்திருந்த மக்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இருப்பினும், அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்னை?
இதுகுறித்து, தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட அந்த அறிக்கையில்,"ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்றுவரை இயக்கிக்கொண்டுள்ளோம்.
120 பேருந்துகள் சிறைபிடிப்பு
கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்றுவரை அதிககட்டணம் புகார் இல்லாமல் இயக்கிவந்த போதிலும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4
நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடித்தும், மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்த கோரியும் இன்று (அக். 24) மாலை 6 மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.
ஆம்னி பேருந்துகளில் இன்று மட்டும் 1 லட்சத்திற்கு மேலாக பயணிகள் முன்பதிவு செய்துதுள்ளார்கள். அந்த வகையில், பயணிகளை போக்குவரத்துதுறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கும்
இந்த அறிவிப்புக்கு பின் பேச்சுவார்த்தைக்கு அரசு தரப்பில் அழைப்புவிடுக்கப்பட்டது. இந்நிலையில், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் மாறன் விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க | ஆவடியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1800 பேருந்துகள் இயங்குகிறது என்றும் அவர்களின் சங்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் இயங்கும் என உறுதியளித்தார். மேலும், நாகலாந்து போன்ற வெளிமாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களும், அதிக கட்டணம் வசூலித்த வண்டிகளை மட்டும் அரசு தரப்பில் சிறைபிடித்துள்ளதாகவும் கூறினார்.
எந்தெந்த பேருந்துகள் இயங்கும்?
மேலும் அவர்,"பண்டிகை காலங்களில் சிலர் அதிகம் கட்டணம் வசூலிக்கின்றனர். 365 நாள்களில் 315 நாள்கள், நாங்கள் 20% சதவீத பயணிகளுடன்தான் இயக்குகிறோம் என்றும் இந்த காலங்களில் எங்களுக்கு வருவாய் வருகிறது" என்றார். பாக்யலட்சுமி, ரதிமீனா, KPN, வெற்றி, Transking, நேஷ்னல் டிராவல்ஸ், KRS உள்ளிட்ட பெரும்பாலான பேருந்துகள் இயங்கும் என உறுதியளித்தார். அனைத்து ஆம்னி பேருந்து ஆப்ரேட்டர் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பிலும் பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம்
பேருந்துகள் சிறைபிடித்தது குறித்தும், ஆம்னி பேருந்துகளின் கோரிக்கை குறித்தும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியதாவது,"சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் எந்த தவறுகளும் இல்லையென்றால் அவை விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார். மேலும், வெளிமாநில பதிவு எண் பேருந்துகளை இயக்கக் கூடாது எனவும் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார். மேலும், ஆம்னி பேருந்துகள் மாலை முதல் இயக்கப்படாவிட்டால் அரசு பேருந்துகள் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ