அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியது, நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். கடற்பகுதிகளில் வாழும் தமிழகம் மீனவர்கள், மீன்பிடிக்க எச்சரிகையுடன் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மைலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ. மழையும், அடுத்தபடியாக காஞ்சிபுரம் சத்தியபாமாவில் 20 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என கூறினார்.