பிரபல பேச்சாளர் நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியதாக பாஜக தேசிய செயலாளர் H.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்!
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிய வகையில் பேசியாதக நெல்லை கண்ணன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-விற்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அவர் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் நெல்லை கண்ணன் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிய நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராடினால் குற்றமாம். பாஜக வினரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் நம் போராட்டத்தின் துவக்கமே இது. அடுத்தகட்ட போராட்டம் நாளை மாலை அறிவிக்கப்படும்.
— H Raja (@HRajaBJP) January 1, 2020
இந்நிலையில் இன்று தமிழக பாஜக சார்பில் நெல்லை கண்ணனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெரினாவில் பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆர்பாட்டம் மேற்கொள்ள, வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள் எதிர்ப்பு பேரணி நடத்தினார். இந்நிலையில் தற்போது சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.