தொகுதி-2 தேர்வு பாடத் திட்ட மாற்றம்: தமிழ் மாணவர்க்கு சாதகமா, பாதகமா?

தமிழ் மாணவர்க்கு நன்மை பயக்குமா என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை!!

Last Updated : Sep 29, 2019, 11:34 AM IST
தொகுதி-2 தேர்வு பாடத் திட்ட மாற்றம்: தமிழ் மாணவர்க்கு சாதகமா, பாதகமா? title=

தொகுதி-2 தேர்வு பாடத் திட்ட மாற்றம்: தமிழ் மாணவர்க்கு நன்மை பயக்குமா என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை!!

இதுகுறித்து அவர் மேளியிட்டுல அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 பணிகளுக்கான போட்டித்தேர்வின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா? என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அது குறித்த உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறி புரிய வைக்க வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

தமிழக அரசுத் துறைகளில் துணை வணிகவரி அதிகாரி, இரண்டாம் நிலை சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 18 வகையான பணிகளுக்கு  நேர்காணலுடன் கூடிய தொகுதி &2 போட்டித் தேர்வு மூலமாகவும், உதவியாளர், தனி எழுத்தர் உள்ளிட்ட 20 வகையான பணிகளுக்கு நேர்காணல் இல்லாத தொகுதி &2ஏ போட்டித் தேர்வு மூலமாகவும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுவரை இந்த இரு போட்டித் தேர்வுகளும் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி இவை ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதனால் மாணவர்கள் தேவையின்றி கூடுதலாக ஒரு போட்டித்தேர்வை எழுதுவது தவிர்க்கப்படும்.

அடுத்ததாக, இதுவரை தொகுதி-2 தேர்வுகளுக்கான முதனிலைத் தேர்வுகளில் மொத்தமுள்ள 300 மதிப்பெண்களில் 200 மதிப்பெண்களுக்கு பொது அறிவு வினாக்கள் கேட்கப்படும்; மீதமுள்ள 100 மதிப்பெண்களுக்கு பொது தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய இரு தாள்களின் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டு முதனிலைத் தேர்வில் 175 பொது அறிவு வினாக்கள், 25 திறனறி வினாக்கள் என 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முதனிலைத் தேர்வில், கடந்த காலங்களில் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய இரு தாள்களில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது என்றிருந்த நடைமுறை தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நடைமுறையில் பொதுத்தமிழ் ஒரு விருப்பப்பாடமாக மட்டுமே இருந்ததால், பட்டப்படிப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கூட பொது ஆங்கிலம் தாளை தேர்வு செய்து முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. கடந்த காலங்களில் 70 விழுக்காட்டினர் பொது ஆங்கிலப் பாடத்தை தேர்வு செய்த நிலையில், வெறும் 30 விழுக்காட்டினர் மட்டுமே பொதுத்தமிழ் பாடத்தை தேர்வு செய்தனர். முதனிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு செல்வோரில் பெரும்பான்மையினர் ஆங்கில வழியில் படித்தவர்களாகவும், அவர்களில் பலர் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காதவர்களாகவும் தான் இருந்தனர். அதனால் தமிழ் மாணவர்களுக்கு  முதன்மைத் தேர்வுக்கும், தமிழக அரசுப் பணிகளுக்கும் தேர்ச்சி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

இப்போதும் மொழிப்பாடம் முழுமையாக நீக்கப்படவில்லை. மாறாக முதனிலைத் தேர்வுக்கான  பாடத்திட்டத்தில் இரு அலகுகள் தமிழ் பாடம் சேர்க்கப்பட்டு, அப்பாடங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வினாக்கள் கேட்கப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன் மூலம் தமிழ் தெரியாதவர்களும், தமிழ் படிக்காதவர்களும் ஆங்கிலத்தின் துணையுடன் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுவது தடுக்கப்பட்டு, தமிழ்ப் படித்தவர்கள் ஒப்பீட்டளவில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் படித்த மாணவர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

முதனிலைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய தாள்களில் இடம்பெறக்கூடிய பகுதிகள் முதன்மைத் தேர்வுகளில் கூடுதல் முக்கியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, முதனிலைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய இரு தாள்களும் இருந்தாலும் கூட, தமிழ் படிக்காத அல்லது தமிழ் தெரியாத ஒருவர், ஒட்டுமொத்த தமிழ்ப் பாட பகுதிகளையும் புறக்கணித்து விட்டு, ஆங்கிலப் பாடப் பகுதிகளுக்கான வினாக்களுக்கு மட்டும் விடையளித்து தேர்ச்சி பெற்று விட முடியும்.

ஆனால், இப்போது முதன்மைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய இரு பாடப்பகுதிகளும் கட்டாயமாக்கப் பட்டிருப்பதால் தமிழ் தெரியாதவர்கள் ஆங்கிலம் தொடர்பான வினாக்களை மட்டுமே  எழுதி தேர்ச்சி பெற முடியாது. அதுமட்டுமின்றி, முதன்மைத் தேர்வு வினாத்தாள் பகுதி அ, பகுதி ஆ என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே 100, 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அ பகுதியில் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கான இரு வினாக்களுக்கு 50 மதிப்பெண்கள்,  ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதற்கான இரு வினாக்களுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப் படும். இந்த 100 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மட்டும் தான் ஆ பகுதி விடைகள் திருத்தப்படும். தமிழ் தெரியாமல் அ பகுதியில் 25 மதிப்பெண்கள் எடுக்கவே முடியாது. அந்த வகையில் தமிழ் தெரியாதவர்கள் அரசு பணிகளில் நுழைவதை இந்த முறை தடுக்கும்.

அதுமட்டுமின்றி திருக்குறள், சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கூடுதல் வினாக்கள் எழுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாக படிப்பவர்களும், தமிழ் இலக்கியம் படிப்பவர்களும் நமது மொழியை ஆழமாக படிக்கவும் இந்த புதிய தேர்வு முறை வகை செய்யும். அண்மைக்காலமாக, தமிழக அரசுப் பணிகளில் தமிழ் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வது அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழ் தெரியாதவர்கள் கூட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது தான் காரணம் ஆகும். அந்த நிலையை மாற்ற தற்போது செய்யப்பட்டிருப்பது போன்ற பாடத்திட்ட மாற்றம் அவசியம். அந்த வகையில் தேர்வாணையத்தின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும்.

 

Trending News