செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்... ஆளுநர் சொல்லும் காரணம் என்ன?

Senthil Balaji Dismissed From Cabinet: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 29, 2023, 09:26 PM IST
  • ஊழல் குற்றச்சாட்டில் இருப்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்.
  • ஆளுநருக்கு அந்த உரிமையில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி.
  • நீதிமன்றத்தில் ஆளுநர் குட்டு வாங்க போகிறார் - டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்... ஆளுநர் சொல்லும் காரணம் என்ன? title=

Senthil Balaji Dismissed From Cabinet: அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்காத்துறையால் கைதானார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, இதயத்தில் இருந்து ரத்த நாள அடைப்பை குணப்படுத்த இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தற்போது, அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் இருந்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சு. முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர் இலக்கா இல்லா அமைச்சராக அமைச்சரவையில் நீடித்து வருகிறார். அவர் அமைச்சராக தொடர்வதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியிலான அரசாணையை வெளியிட்டது. 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று மாலை வெளியிட்ட செய்திகுறிப்பில்,"பணி வழங்குவதற்கு பணம் கேட்டது மற்றும் பணமோசடி உட்பட பல ஊழல் வழக்குகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான குற்றத்தை எதிர்கொண்டுள்ளார். அவர் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, உரிய விசாரணை நடைபெறுவதற்கும், சட்டம் மற்றும் நீதியில் உரிய நடவடிக்கைக்கும் இடையூறாக இருந்துள்ளார். தற்போது அவர் குற்றவியல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 

மேலும் படிக்க | மெக்கானிக்கல் இன்ஜினியர் டூ தமிழ்நாடு டிஜிபி... யார் இந்த சங்கர் ஜிவால்?

அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர்களுக்கு செந்தில் பாலாஜியின் இலக்காகளை மாற்றிக்கொடுக்க அனுமதித்த ஆளுநர், செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக இலக்கா மாற்றம் செய்யும்படி தமிழ்நாடு அரசின் பரிந்துரையை அவர் ஏற்க மறுத்தார். இருப்பினும், திமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இறுதியில் அரசாணை வெளியிடப்பட்டது. 

தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டது குறித்து திமுக அமைப்புச்செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"ஆளுநர் என்ற பதவிக்கான கௌரவத்தை காப்பாற்றாமல், பாஜகவின் அடிவருடியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அந்தப் பதவிக்கே அவர் தகுதி இல்லாதவர். ஒரு அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரால்தான் முடியும். ஆளுநர் எப்படி நீக்க முடியும்? இந்த அறிக்கை தொடர்பாக வேறு வழியே இல்லாமல் நாளை நீதிமன்றத்தில் குட்டு வாங்குவார், ஆளுநர். 

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றும் நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஆளுநருக்கு நாக்-அவுட் பஞ்ச் கொடுத்த ஸ்டாலின்... அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News