9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று, நேற்று தொடங்கியது அல்ல. பலமுறை அரசிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேச்சுவாரத்தை மற்றும் போராட்டம் என பல கட்டங்களை கடந்து வந்துள்ளனர். ஆனால் விளைவு இதுநாள் வரை, அரசு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. மாறாக அவர்களை எச்சரிக்கவும், மிரட்டவும் தான் செய்கிறது அரசு.
ஒருபுறம் பேச்சுவாரத்தை நடத்த அரசு தயார் எனக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள் எனக்கூறி மிரட்டல் விடுத்ததோடு, போராட்டம் செய்து வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படும் எனவும் அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது தமிழக அரசு.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் கோரிக்கைகளை குறித்து பரிசீலனை செய்யாமல், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தான் அரசின் கடமையா? இந்த கோரிக்கை இன்று வைத்தது இல்லை. இதுக்குறித்து ஏற்கனவே பலமுறை அரசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதுநாள் வரை அரசு கோரிக்கை குறித்து ஏன்? ஆலோசனை செய்யவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் நடத்தப்படும் பேச்சுவாரத்தை ஏன்? தோல்வியில் முடிவடைகிறது. பேச்சுவாரத்தை தோல்விக்கு காரணம் அரசு நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை எற்படுத்துகிறது. பல வருடங்களாக போராட்டம் நடத்தி வரும், இவர்களின் கோரிக்கையை ஏன் அரசு கண்டுகொள்ள மறுக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் அரசு தரப்பில் கூறப்படுவது ஒன்றே ஒன்று தான். அது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் சாத்தியமற்றவை என்பதாகும்.
யார் மீது தவறு? உண்மையான பிரச்சனை தான் என்ன? சம்பள உயர்வுக்காக மட்டும் தான் போராடுகிறார்களா? ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தை அரசு திசை திருப்ப பார்க்கிறதா? கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
நிலுவை தொகை:
அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்திற்கு காரணம் சம்பள உயர்வு இல்லை. மாறாக அவர்களின் நிலுவை தொகை. இந்த நிலுவை தொகை எப்படி வந்தது. ஏன் போராடுகிறார்கள்?
மத்திய அரசு ஊழியர்கள் போல மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என 7 ஆவது ஊதியக் கமிஷன் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைபடி 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய சம்பள விகிதம் அமல்படுத்துவதாக அரசு அறிவித்தது. ஆனால் புதிய சம்பள விகிதத்தை 21 மாதங்களாக கொடுக்காமல் பிடித்தம் செய்தது அரசு, அந்த 21 மாத நிலுவை தொகையை தான் கொடுக்கச்சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள். சம்பளம் உயர்த்தி தரச்சொல்லி அல்ல. அதுக்குறித்து அரசு எந்தவித உத்தரவாதமும் தரமறுக்கிறது.
பென்சன்:
தற்போது உள்ள ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான விசியம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்தினால் அரசுக்கு தான் பணம் மிச்சம்.
2003 ஆம் ஆண்டி ஜூலை மாதத்தில் 50,4000 அரசு ஊழியர்களிடம் பென்சனுக்காக பிடித்தம் செய்த 10% சம்பளம் 28 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய பென்சன் திட்டத்தை முன்னால் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அமல்படுத்தினார். 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பென்சன் கிடைக்கும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
புதிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 28 ஆயிரம் கோடி ரூபாயுடன், அரசு தரப்பில் தனது பங்கிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும். ஏற்கனவே அரசு நிதிச்சுமையில் இருப்பதால், அந்த 28 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட முடியாது என தமிழக அரசு தெரிவித்தது.
அதனால் தான் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எங்களுக்கு புதிய பென்சன் திட்டம் தேவையில்லை, பழைய பென்சன் திட்டமே போதும் என்று கூறியுள்ளனர். அதாவது புதிய பென்சன் திட்டத்தில் அரசுக்கு மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் பழைய பென்சன் திட்டம் மீண்டும் செயல்படுத்தினால் அரசுக்கு மொத்தம் 35 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். பார்க்கப்போனால் பழைய பென்சன் திட்டம் மூலம் அரசு 35 ஆயிரம் கோடி மிச்சம் ஆகும். எப்படி என்றால்,
(புதிய பென்சன் திட்டம்: ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ. 28 ஆயிரம் கோடி + அரசு தரப்பில் ரூ. 28 ஆயிரம் கோடி = ரூ. 56 ஆயிரம் கோடி; இதற்க்கான வட்டி ரூ.14 ஆயிரம் கோடி; மொத்தம் அரசு செலுத்த வேண்டியது ரூ. 70 ஆயிரம் கோடி. பழைய பென்சன் திட்டம்: ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ. 28 ஆயிரம் கோடி + அதற்க்கான வட்டி ரூ. 7 ஆயிரம் கோடி = மொத்தம் அரசு செலுத்த வேண்டியது ரூ. 35 ஆயிரம் கோடி மட்டுமே.)ஆனால் இந்த கோரிக்கையை அரசு ஏற்பதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
அரசாணை 56 மூலம் புதியவர்களை அரசு பணியில் அமர்த்தும் முறை முற்றிலும் அளிக்கப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசாணை 100 மற்றும் 101 மூலம் 3500 சத்துணவுக் கூடங்கள் மற்றும் 5000 பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலை உருவாகி உள்ளது. இவை அனைத்துக்கும் தான் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது ஜனநாயக கடமை. அதேபோல ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசும் தன் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. அதேபோல ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்களின் நலனைக்கருதி தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துளனர்.