அரசு மருத்துவர்களின் இடமாற்றத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் இட மாற்றம் செய்யப்பட்டதும், அவர்களுக்கு 17பி குறிப்பாணை வழங்கப்பட்டதும் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மை என்றால், மிகவும் வருந்தத்தக்கதாகும்.
காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்காக மருத்துவர் சங்கங்களின் நிர்வாகிகள் 135 பேருக்கு 17பி குறிப்பாணை வழங்கிய தமிழக அரசு, அவர்கள் அனைவரையும் வெகு தொலைவுக்கு பணியிட மாற்றம் செய்து ஆணையிட்டது.
இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டதை கடுமையாக கண்டித்தது. அதே நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவும், இவ்விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றும் விமர்சித்த உயர்நீதிமன்றம், அரசு மருத்துவர்கள் மீதான அமைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து ஆணையிட்டது. இதன்மூலம் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற சிக்கலுக்கு தீர்வு கிடைத்து விட்டதாக அனைவரும் நிம்மதியடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. அரசின் இம்முடிவு ஒரு சிக்கலை தீர்ப்பதற்கு மாறாக மேலும் சிக்கலாக்குவதற்கு ஒப்பானதாகும்.
மக்கள்நல அரசின் பெருமை என்பது ஒரு விவகாரத்தில் வெற்றி பெறுவதில் இல்லை; மாறாக அந்த பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதில் தான் உள்ளது. அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த எந்த உரிமையும் இல்லை; அவர்கள் இனி எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்று கண்டித்த பிறகு தான் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், அரசு மருத்துவர்கள் இனி போராட்டம் நடத்த முடியாது என்ற நிலையை ஏற்படுத்தலாம். இது தான் அரசு மருத்துவத்துறைக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாகும்.
தமிழக அரசு மருத்துவர்கள் 135 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளிலும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் இதய நோய், சிறுநீரக நோய், முடநீக்கியல், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றி வந்த மூத்த அரசு மருத்துவர்கள், சாதாரண அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மாற்றப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், அவர்களின் சிறப்பு மருத்துவ சேவை யாருக்கும் பயன்படவில்லை. அதேநேரத்தில், சிறப்பு மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் உயர்சிறப்பு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்ள சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தரமான மருத்துவம் அளிப்பது தான் அரசு மருத்துவமனைகளின் முதன்மை பணியாகும். ஆனால், மூத்த மருத்துவர்கள் மாற்றப்பட்டிருப்பதால் மருத்துவமனைகளால் இந்த பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப் படுவது ஏழை பொதுமக்கள் தான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் கவுரவம் பார்க்கத் தேவையில்லை. எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் இடமாற்றத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். உயர்நீதிமன்ற ஆணைப்படி, இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய மருத்துவமனைகளில் மீண்டும் பணியமர்த்தவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.