அரசு ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தம்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு

மாணவர்களின் நலனை கருத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2019, 05:51 PM IST
அரசு ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தம்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு title=

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. 

இன்று மூன்றாவது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் செய்து வருவதால், பல அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களே சக மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என பொற்றோர்கள் கவலைகொண்டு உள்ளனர். பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளனர்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பு மற்றும் அரசுக்கு இடையே பலமுறை நடந்த பேச்சுவாரத்தை தோல்வியில் தான் முடிந்தது. தற்போது மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கைது செய்து வருகிறது தமிழக காவல்துறை. 

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

ஆனால் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடரும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு விதி 17B-யின் கீழ் நோட்டீஸ் அனுப்பவும் கூறி பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.

Trending News