உலகம் முழுவதும் குப்பை அரசியல் பெரும் விவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. வளரும் நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளிடம் தங்களது குப்பைகளைக் கொட்டுகின்றன. குறிப்பாக, வல்லரசு நாடுகள் என சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மூன்றாம் தர நாடுகளான ஆப்பிரிக்க நாடுகளில் தங்களது குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
குப்பைகளைக் கொட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடம், மனிதர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருக்க வேண்டும் என்பது உலக நியதி. ஆனால், யதார்த்தம் அப்படி இருப்பதில்லை.
சமீபத்தில் சென்னை அருகே உள்ள பள்ளிக்கரக்கணை சதுப்புநிலங்களில் கொட்டப்படும் குப்பைகளை நீக்குமாறு நீதிமன்றமே தலையிட்டு ஆணையிடும் அளவுக்கு இந்தப் பிரச்சனை பல்வேறு பகுதிகளில் விஸ்வரூபமெடுக்கிறது. குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே அத்தனைக் குப்பைகளையும் கொண்டுவந்து மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கொட்டுகின்றனர். கிட்டத்தட்ட மலைபோல் குவியும் குப்பைகளில் அடிக்கடி தீ பற்றிக் கொள்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றமும், பெரும்புகையும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்று நிரூபணமாக்கும் வகையில் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பெரும்பாலான உடல் உபாதை பிரச்சனைகள் தொடங்கியிருக்கின்றன.
மேலும் படிக்க | விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.., போலீஸார் விசாரணை..!
குப்பைகள் கொட்டப்படும் பகுதியின் அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் ஆங்காங்கே சிறுசிறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், தற்போது இந்தப் பிரச்சனை அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது. மாநகராட்சி கூட்டங்களிலும், நகராட்சி கூட்டங்களிலும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உறுப்பினர்கள் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில், நாகையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் குப்பைக் கொட்டும் விவகாரத்தில் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 36 வார்டுகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் முதலில் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்துவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்தந்த வார்டு பிரச்சனையை உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர்.
நாகை நகராட்சியில் பல்வேறு வார்டுகளில் சாக்கடை கலந்த குடிநீர் வருவதாகவும், குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து பேசிய 33 வார்டு அதிமுக உறுப்பினர் பரணி, கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அதிமுக உறுப்பினர் பரணி, இல்லையென்றால் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு சமூக ஆர்வலர்கள் செல்லும் நிலை ஏற்படும் என்றார்.
மேலும் படிக்க | ஆற்றில் குப்பைகளை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்! யார் பொறுப்பு?
அப்போது குறுக்கிட்டுப் பேசிய 16வது வார்டு திமுக உறுப்பினர் சுரேஷ், நகராட்சியின் பிரச்சினைகளை நகர்மன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, இதனை பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எடுத்துச் செல்வோம் என அதிமுக உறுப்பினர் எச்சரிக்கை விடுப்பதை போல் பேசுவதாக கூறினார். அப்போது நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே பெரும் காரசார வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. இதனால் நாகை நகரமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பேசிய நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர எச்சரிக்கை விடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
உறுப்பினர்களின் கூச்சல் அமளிகளைத் தாண்டி, ‘நாள்தோறும் துர்நாற்றப் புகையை கக்கிக் கொண்டிருக்கும் குப்பைக் கிடங்கில் இருந்து எப்போது விடுதலை’ என்று ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கும் கோட்டைவாசல்பட்டி மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுமா இந்த நாகை நகர்மன்றம்.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR