மூத்த கலைஞர்தான்... அதற்காக இப்படியா கங்கை அமரன்?

ஒருவேளை பாஜக சாயம் பூசிக்கொண்ட கங்கை அமரன் அதை இளையராஜாவுக்கும் பூச முயற்சிக்கிறாரோ என்ற கேள்வி இயல்பாகவே அனைவரிடமும் எழுந்தது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 3, 2022, 07:33 PM IST
  • நெறியாளரை ஒருமையில் பேசிய கங்கை அமரன்
  • சர்ச்சை கிளப்பிய கங்கை அமரன்
  • மோடியை புகழ்ந்த இளையராஜா
 மூத்த கலைஞர்தான்... அதற்காக இப்படியா கங்கை அமரன்? title=

மோடியை அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டு எழுதிய முன்னுரையின் கதை இன்னமும் முடிவுரை இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முறை தொடரவைத்தது அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன். 

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நெறியாளரை ஒருமையில் பேசியும், பேட்டியின்போது கத்தியும் ஒருவர் எப்படி நடந்துகொள்ளக்கூடாதோ அதன் மொத்த உருவமாக கங்கை அமரன் அந்தப் பேட்டியில் நடந்துகொண்டார்.

Gangai Amaran

தனது கருத்தை சொல்ல இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறது என்று அவரது பக்கம் நின்றவர்கள்கூட நேற்று கங்கை அமரன் பேச்சை கேட்டு நெளிந்தனர். இதற்கும் இளையராஜாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். ஆனால் இதன் அடிப்படை இளையராஜா விஷயம்தானே. 

அந்த நெறியாளர் கேட்டதற்கு பொறுமையாக பதில் சொல்ல முடியாத கங்கை மீது இதுவரை பலரும் வைத்திருந்த புனித பிம்பம் நேற்று உடைந்துபோனது. இதுவரை எந்த அரசியல் சாயமும் பூசிக்கொள்ளாத இளையராஜா இப்போது மட்டும் ஏன் மோடி சாயம் பூசிக்கொள்கிறார். ஒருவேளை பாஜக சாயம் பூசிக்கொண்ட கங்கை அமரன் அதை இளையராஜாவுக்கும் பூச முயற்சிக்கிறாரோ என்ற கேள்வி இயல்பாகவே அனைவரிடமும் எழுந்தது.

Gangai Amaran

அதன் அடிப்படையில்தான் அந்த நெறியாளர், “இளையராஜா எழுதிய முன்னுரையை நீங்கள் எழுதி கொடுத்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறதே” என்று கங்கை அமரனிடம் கேள்வியை கேட்டார். ஆனால் அதனை சகித்துக்கொள்ள முடியாத கங்கை அமரன் தன் நிலையிலிருந்து எவ்வளவு கீழ் இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பேசியது பெரும் அதிர்ச்சியைத்தான் அளித்தது.

நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “இத்தனை காலம் இளையராஜா உருவாக்கிய பாடல்களை எல்லாம் நான் உருவாக்கினேன் என்று சொல்வீர்களா” என கங்கை அமரன் பதில் கேள்வி கேட்டதுதான் அபத்தத்தின் உச்சம்.

Gangai Amaran

இதன் மூலம் கங்கை அமரன் எதை உணர்த்த விரும்புகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பிவருகின்றனர். மேலும், இளையராஜாவின் நிழல் இல்லாமலும் இசையமைத்து வெற்றி பெற்ற கங்கை அமரன் எதற்காக இப்போது இளையராஜா இசைக்குள் தன்னை செலுத்த முயல்கிறார் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.

பல தலைமுறைகளாக மீடியாவை சந்தித்துவரும் ஒருவர், மூத்த கலைஞர் என்ற அடையாளத்திற்குள் இருப்பவர் இப்படி நடந்தது என்பது அவரது பக்கங்களில் நிச்சயம் அழுக்கு படிந்ததாகவே இருக்கப்போகிறது என்கின்றனர் திரைத்துறையினர்.

Gangai Amaran

கங்கை அமரன் நெறியாளரை எதிர்கொண்ட விதத்தில், “மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை சேர்ந்த என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்ற தொனியே தென்பட்டது என்கின்றனர் ஒரு தரப்பினர். இது இப்படி இருக்க பேட்டியில் அவ்வாறு நடந்துகொண்டதற்கு கங்கை அமரன் உடனடியாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். 

மேலும் படிக்க | இலங்கை மக்களுக்கு உதவ நிதி தாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஒருவேளை அதற்கு அவரது ஈகோ தடுத்திருந்தால் பேட்டியை முழுமையாக முடித்து பக்குவமாக கடந்திருக்க வேண்டும். இந்த இரண்டையுமே செய்யாமல் பேட்டியை பாதியில் முடித்து கிளம்பியது மூத்த கலைஞருக்கு அழகல்ல எனவும் சிலர் கூறுகின்றனர். ஆகமொத்தம் கங்கை அமரன் பேட்டியில் நடந்துகொண்டதன் மூலம், கங்கை அமரன் என்றால் ஜாலியான ஆள், வெகுளியான ஆள் என்று இத்தனை நாள் உருவாகியிருந்த பிம்பம் சுக்குநூறாக நொறுங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | அடுத்தடுத்து நடக்கும் மறுவாழ்வு மைய மரணங்கள்... இயற்கை மரணமா? கொலையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News