தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன தாக்கல் செய்தார்.
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து" என்ற திருவள்ளுவரின் குறள் 738 -ஐ குறிப்பிட்டு உரையை தொடங்கினார்.
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை நான் தாக்கல் செய்தபோது பல்வேறு புதிய திட்டங்கள், அறிவிப்புகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்த மனநிறைவுடன் நான் எனது இரண்டாவது வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த அவையின் முன்வைக்கின்றேன்.
தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, நான் எனது முன்னோர்களையும், அரசியல் ஆசான்களையும், எனக்கு முன்னர் இந்தப் பொறுப்பை வகித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களையும் வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்.
அவர்கள் ஒவ்வொருவரும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த சேவை ஆகியவற்றின் காரணமாகவே இன்று இம்மாமன்றத்தில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய பொதுவாழ்வில் என்றென்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து, கலங்கரை விளக்கமாகத் திகழும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை நாங்கள் நிதி மேலாண்மையில் அடைந்துள்ள சாதனைகள் அனைத்துமே அவரது வழிகாட்டுதலாலும், முழு ஆதரவினாலும் மட்டுமே எய்தப்பட்டவையாகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தைத் தொடங்கும்போது.. “இன்றைய சூழல்களை மட்டும் கருத்திற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதை மனத்தில் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்தனர். கோவிட் பெருந்தொற்றின் முதல் அலை பரவலைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் இரண்டாம் அலை பரவியிருந்த நேரத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.
அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் வகுத்துள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு, வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற வரவு செலவுத் திட்ட சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
பதவியேற்ற நாளிலிருந்து இந்த அரசு கோவிட் பெருந்தொற்று, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை சந்திக்க நேர்ந்தது. 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையால் சென்னை பெரும் பாதிப்புக்குள்ளானது. அதைக்காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பல பகுதிகளில் மிக அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்தது. இருப்பினும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி நடவடிக்கைகளாலும், கள ஆய்வுகளாலும், இழப்புகளும் இறப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை (ஒமிக்ரான்) தமிழ்நாடு சந்தித்தது. இந்த அரசால் இரண்டாம் அலையின் போது ஏற்படுத்தப்பட்ட கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளும், கற்றுக்கொண்ட அனுபவத்தின் பயனாலும் மூன்றாவது அலை மிகச்சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மாநில நிதிநிலையில் மேலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.
எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிருவாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்தது.இதன் பயனாக, மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம்.
மேலும் படிக்க | Tamil Nadu Budget 2022: நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய்
2014 ஆம் ஆண்டு முதல்,வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது.
மேலும் படிக்க | Tamil Nadu Budget 2022 Update: உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய்
இந்த உறுதியான நடவடிக்கைகளின் அடித்தளமாக இருப்பவர் திராவிட மாதிரி வளர்ச்சியின் (Dravidian Model) இலக்கணமாகத்திகழ்பவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே. அவரின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும், சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.
திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணிவேராகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளும், செயல்களும், எழுத்துக்களும் இந்த அரசை சிறப்பாக வழிநடத்தி வருகின்றன.
திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் பல புரிந்த போதிலும், இப்போராட்டத்தில் நாம் இன்னும் முழுமையாக வெற்றி அடையவில்லை. எனவே, அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நமது கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருப்போம்.
அண்மையில், தாமிரபரணி படுகையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், பண்டைத் தமிழ் நாகரிகத்தின் தொன்மை, குறைந்தது 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வெளிப்படுத்தியுள்ளன. உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் நமது தமிழர் நாகரிகமும் ஒன்று என்பதை இது உறுதி செய்துள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, தமிழ்ச் சமுதாயத்தின் நீண்ட நெடிய பண்பாட்டின் வழித்தோன்றல் என்றே தன்னைக் கருதுகிறது. நம் நாட்டின் பன்முகப் பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில், தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்.
ஒன்றிய மாநில நிதி உறவுகள், தரவு அடிப்படையிலான ஆளுகை (Data Centric Governance), அரசு உடைமைகள் மற்றும் இடர் மேலாண்மை (Asset &Risk Management), அதிக பொறுப்புடைமை மற்றும் உற்பத்தித்திறன் (Increased Accountability and Productivity), சட்டமன்றத்தின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகிய ஐந்து முக்கிய முன்னெடுப்புகளை, இந்த அரசு நிருவாகத் திறனை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் என்று கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒன்றிய மாநில நிதி உறவுகளை ஆய்வு செய்ய சிறப்பு ஆலோசனைக் குழு அமைத்தல், தரவுத் தூய்மை (Data Purity) திட்டச் செயலாக்கம், மாநிலத்தின் உள்தணிக்கை அமைப்புகளை சீரமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயல்பாட்டையும் தலைமைப் பண்பையும் மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரித்துள்ளனர் என்பதையும் தமிழ்ச் சமுதாயம் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது. இது எங்களின் உழைப்பை பன்மடங்கு அதிகரிக்க ஊக்கமளிக்கிறது.
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். நமது அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு இணக்கமான உறவை வடிவமைத்தனர். நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றன. மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மாநிலங்களின் உரிமைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும்.
வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான,பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.தற்போது உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியும் (Demand Shocks), உலகளாவிய அளிப்பிலுள்ள பாதிப்புகளும் (Global Supply Disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பணவீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்குமென பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், கோவிட் பெருந்தொற்றின் தாக்கமும் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று தற்போது கூற இயலாது. இது மட்டுமின்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முழு இழப்பை அரசு ஏற்பதன் விளைவையும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் முழு தாக்கத்தையும், கடன் தள்ளுபடியின் தாக்கத்தையும் வரும் நிதியாண்டில் இந்த அரசு சந்திக்க நேரிடும்.
இத்தகைய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது அரசியல் முன்னோர்களான நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே, சமூகநீதிக்கான அளவுகோல் திராவிட இயக்கத்திற்கான அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன.
பொருளாதாரப் பார்வையில் சமூகநலனுக்கும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த ஆண்டில் பெருந்தொற்றின் காரணமாக சமூகத்தில் நலிந்த பிரிவினர்களின் துயர் துடைப்பதை குறிக்கோளாகக் கொண்டு நாம் பணியாற்றினோம்.
தற்போது, நமது பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்று வர, சமூகநலத் திட்டங்களில் எவ்விதக் குறையுமின்றி, நமது முன்னுரிமைகளை மறுபரிசீலித்து சமூகக் கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
மேற்கூறிய அணுகுமுறையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில்சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் விதமாக இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசிய பிறகு 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR