மனநலம் பாதிக்கப்பட்ட நபரை முகப்புத்தகம் உதவியோடு தமிழக காவல்துறை அவரது உறவினர்களிடன் சேர்த்துவைத்துள்ளனர்!
கடந்த 21.10.2018-ஆம் நாள் S-7, மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த சுமார் 21-வயது மதிக்கத்தக்க வாலிபரை இருசக்கர வாகனம் திருட முயன்றவர் என பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை தலைமை காவலர் திரு. அமல்ராஜ் அவர்கள் விசாரணை செய்ததில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்துள்ளார். பின்னர் விசாரணையில் அவரிடமிருந்து பெற்ற செல்போன் எண்ணை கொண்டு அவரது முகநூல் பதிவை (Facebook) கண்டுபிடித்து அதில் இவரை பற்றிய விவரங்களை அளித்து அவருடைய உறவினர்களிடம் சமூக ஆர்வலர் திரு. நாராயணன் என்பவர் உதவியுடன் இந்தியில் பேசி குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நபரின் பெயர் திபேந்திரபுயான் என்றும் ஒடிசா பாலேஸவர் பகுதியை சேர்ந்தவர் என்றும்¸ அவர் ITI முடித்து கேரளாவிற்கு வேலைக்கு சென்றார் என்றும்¸ அங்கு அவர் ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. மேலும் இரயில் மூலம் சென்னைக்கு வந்த இவர் மடிப்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக சுற்றி திரிந்துள்ளார்.
பாதிக்கபட்ட அந்த நபரை பாதுகாத்து வைத்து கடந்த 24.10.2018-ஆம் நாள் அவரது உறவினர்கள் வசம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். உறவினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து திபேந்திரபுயானை அழைத்து சென்றனர்.