Tirupati | திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் முக்கிய அறிவப்பு வெளியாகியுள்ளது.
Tirupati Vaikunta Ekadashi | திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு வைகுண்ட ஏகாதி விழா கொண்டாடப்படும்போது ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10 ஆம் தேதி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி இவ்விழாவுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு ஆலோசனை நடத்தியது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது.
திருப்பதியில் திறக்கப்படும் சொர்க்கவாசல் விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் வருவார்கள் என அறங்காவலர் குழு திட்டமிட்டுள்ளதால் விழா ஏற்பாடுகளை இப்போதே தொடங்க அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருப்பதால் சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் வரும் இலவச தரிசன டிக்கெட்டுகள் அதிகம் கொடுக்கவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகள், பாதுகாப்பு, தகவல் மையம், உணவு உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக இருப்பதும், பக்தர்களுக்கு வழங்க வேண்டிய பிரசாதம் குறித்தும் ஆலோசனை நடத்திய அறங்காவலர் குழு, கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், முதியோர்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் திருப்பதி செல்வதை தவிர்ப்பதே நல்லது.
திருப்பதி வைகுண்ட ஏகாதசி முக்கிய நிகழ்வான தங்க தேரோட்டம் 10 ஆம் தேதியும், சக்கர ஸ்நானம் ஜனவரி 11 ஆம் தேதியும் நடக்கிறது. பெருமாளின் சொர்க்க வாசல் வழியாக வைகுண்ட ஏகாதசி திதி நாளில் செல்லும்போது, வெங்கடாஜலபதி அருளால் நேரடியாக சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.
இதனாலேயே வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். குறிப்பாக மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 2024 ஆம் ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்காத நிலையில், ஜனவரி 2025 ஆம் ஆண்டு இரண்டு முறை சொர்க்கவாசல் திறப்பு நடக்க இருக்கிறது. அந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் இரண்டாவதாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்க உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி திதி கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பக்தர்கள் பெருமாளை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.