காகிதப் புலியா சசிகலா? பொதுச்செயலாளராகும் இபிஎஸ்? அதிமுகவில் அடுத்த அதிரடி!

 தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கொண்டு வர இபிஎஸ் முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 13, 2022, 02:02 PM IST
  • சசிகலாவின் அரசியல் பயணத்துக்கு செக்?
  • இபிஎஸ் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை
  • சசிகலா மெளனத்தால் ஆதரவாளர்கள் அதிருப்தி
காகிதப் புலியா சசிகலா? பொதுச்செயலாளராகும் இபிஎஸ்? அதிமுகவில் அடுத்த அதிரடி! title=

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த  வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து சசிகலாவின் அரசியல் கனவு சற்று ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அடுத்த சில அதிரடி திட்டங்களுடன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

EPS Sasikala ADMK

மேலும் படிக்க | அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும்... சசிகலா சொல்வது என்ன?

அதோடு கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொண்டர்களை சந்தித்து பேசுவேன் என்றார். ஆனால் தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் ஊர்களில் அவரது தொண்டர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு அளித்தாலும், அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.இதற்கு நடுவே அதிமுக பொது செயளாலராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை  பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sasikala google ADMK

பொது செயலாளர்  இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும்,  கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

Sasikala OPS ADMK

அதேநேரம் சசிகலாவின்  வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்று, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.இந்த தீர்ப்பை அடுத்து சசிகலா ஆடிப்போயுள்ளார். நீதிமன்றத்தில் தனக்கு சாத   கமான தீர்ப்பு வரும் எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனைத்து வேலைகளையும் இபிஎஸ் செய்து வருவதாக சசிகலா ஆதரவாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அமைதி காத்த இபிஎஸ் தற்போது சில அதிரடி முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க | நான் இந்தி பேச மாட்டேன்... இந்தியால் எந்த பெருமையும் இல்லை - அண்ணாமலை அதிரடி!

அதன்படி தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கொண்டு வர இபிஎஸ் முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வமும் பதவிகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஓபிஎஸ் ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக கட்சிக்குள் இபிஎஸ்-க்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும், ஆனாலும் அவர் சாமர்த்தியமாக கட்சியை வழிநடத்துவதால் ஓபிஎஸ் உடன் பேசி சமரசம் முடிக்க வாய்ப்புள்ளதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கொள்கின்றனர்.

Jayalalitha Sasikala google

ஓபிஎஸ் இதற்கு சம்மதிப்பாரா என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த சிக்கலை சசிகலா நீக்கியுள்ளதால், எடப்பாடி பழனிசாமிக்கு அது சாதகமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது வெடிக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் அறிக்கை மூலம் மட்டுமே சசிகலா தனது கருத்தை பதிவிட்டு வருவதால் காகிதப் புலியாக மட்டும் இருந்தால் அரசியலில் சாதிக்க முடியாது என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்துள்ளது. விரைவில் சசிகலா அதிரடி காட்டவில்லை என்றால் தொண்டர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இழந்துவிடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Trending News