மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும்!

பொறியியல் மற்றும் பிற பட்டங்களை பெற்றவர்களும்  மின்சார கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

Last Updated : Mar 13, 2020, 04:52 PM IST
மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும்! title=

பொறியியல் மற்றும் பிற பட்டங்களை பெற்றவர்களும்  மின்சார கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டண கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரை தேர்ந்தெடுக்க ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்றும், பிற பட்டதாரிகள் கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மின் கணக்கீட்டாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. மின் கணக்கீட்டாளர்கள் பணிக்கான தகுதி கலை, அறிவியல் அல்லது வணிகவியல்  பாடத்தில் பட்டம் பெற்றிருப்பது தான் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பிற பாடங்களில் குறிப்பாக பொறியியல், வேளாண் அறிவியல்,  கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளை படித்தவர்களால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின் வேலை பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண கணக்கீட்டாளர் பணி தொழில்நுட்பம் சாராத பணி; அதனால் சாதாரண பட்டப்படிப்பே அந்த பணிக்கு போதுமானது என்பது மிகவும் நியாயமான வாதம் தான். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படாத நிலையில், அவர்களையும் மின் கட்டண கணக்கீட்டாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நிகழ்கால எதார்த்தங்களின் அடிப்படையில் பார்த்தால் பொறியியல் பட்டதாரிகளின் கோரிக்கை நியாயமானதாகும்.

மின்சார வாரியத்தில் பொறியியல் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட உதவிப் பொறியாளர்கள் பணிக்கும் ஆள்தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டியிடலாம் என்ற வாதம் முன்வைக்கப்படக் கூடும். ஆனால், மின்னியல், எந்திரவியல், சிவில் ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே உதவிப் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அப்பணிகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மற்றும் அவற்றைச் சார்ந்த பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். பிற பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.

அதற்கெல்லாம் மேலாக, இன்றைய சூழலில் அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாகி விட்டது. அரசுத் துறைகளில் மிகக் குறைந்த ஊதியம் தரும் பணிகள் என்றால் கூட, அப்பணிகளைக் கைப்பற்ற கடுமையான போட்டி நிலவுகிறது. அண்மையில் கூட, சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்தங்களை கையாளும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான் என்ற போதிலும், மொத்தமாக விண்ணப்பித்த 1400 பேரில் 70%க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகள் ஆவர்; 50 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்; அவர்களிலும் பலர் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் ஆவர். அதேபோல், கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் பட்ட மேற்படிப்பு, பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கற்றவர்கள் ஆவர். இது தான் இன்றைய கள எதார்த்தம் ஆகும்.

படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ற வேலை வழங்கப்பட வேண்டும் என்பது தான் நியதி. இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும்  ஆகும். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மற்றும் பிற பட்டங்களை பெற்றவர்களும்  மின்சார கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும். 

Trending News