கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்ட மினி கிளினிக் மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாட்டில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, இப்போது மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 1820 மருத்துவர்களையும், 1420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களையும் மார்ச் 31ஆம் தேதியுடன் பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்ட அவர்களை நீக்குவது எவ்வகையிலும் நியாயமல்ல.
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டபோது, அவற்றுக்காக 1820 மருத்துவர்களும், 1420 பன்நோக்கு மருத்துவப் பகுதி நேரப் பணியாளர்களும் ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவர்கள் ஓராண்டு பணிக் காலத்தில் செய்த சேவைகள் எளிதில் புறந்தள்ள முடியாதவை.
கடந்த ஆண்டில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட போதிலும், சுமார் 2 மாதங்கள் மட்டும்தான் அவை முழுமையாகச் செயல்பட்டன. அதற்குள்ளாகத் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் படிக்க | கஞ்சா போதையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் - கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலம்..!
கொரோனா பரவல், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட ஆபத்துகள் இருந்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் மருத்துவர்களும், பிற பணியாளர்களும் பணியாற்றினார்கள். அவர்களில் பலர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நலம் பெற்றுப் பணிக்குத் திரும்பினர்.
இப்போதும் கூட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 19 வகையான பணியிடங்களில் எந்தக் குறையுமின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையை தமிழ்நாடு அரசும் அங்கீகரித்துள்ளது. இத்தகைய சூழலில் அவர்களை பணி நீக்கம் செய்வதை நியாயப்படுத்த முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அம்மா கிளினிக் மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்ய கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. டிசம்பர் மாதத்துடன் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்ட நிலையில், ஜனவரி மாத இறுதியில், அவர்கள் பணி நீக்கப்படுவதாக வாய்மொழியாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியும் அந்த முடிவை கடுமையாக எதிர்த்தது. அதைத் தொடர்ந்து தான் மருத்துவர்களின் பணிக்காலம் மார்ச் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்களின் பணிக்காலத்தை மார்ச் மாதம் வரை என்னென்ன காரணங்களுக்காக அரசு நீட்டித்ததோ, அதே காரணங்களுக்காக அவர்களை இனியும் பணியில் நீட்டிக்கச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி வரை 9 கோடியே 98 லட்சம் பேருக்கு மட்டும் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 12 வயதுக்கும் மேற்பட்டவர்களை மட்டும் கணக்கில் கொண்டாலே இன்னும் 4 கோடி தடுப்பூசிகள் போடப்பட வேண்டியிருக்கும். இது இமாலயப் பணியாகும். அதற்கு இந்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களின் சேவை தேவைப்படும்.
கொரோனா மூன்று அலைகளின் தாக்குதலுக்குப் பிறகு குக்கிராமங்களில் தொடங்கி, பெருநகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்களின் மருத்துவத் தேவைகள் அதிகரித்துள்ளன. இப்போதிருக்கும் மருத்துவர்களைக் கொண்டு அந்தத் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்பதை மருத்துவத்துறை உயரதிகாரிகளே தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், அது மக்களுக்கும் பயனளிக்கும்; பணியில் உள்ள அரசு மருத்துவர்களின் பணிச்சுமையையும் குறைக்கும்.
மேலும் படிக்க | ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்..!
அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு ரூ.60 ஆயிரமும், பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் இம்மாத இறுதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்; அவர்களின் குடும்பங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகும். அத்தகைய சூழலைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி விடக் கூடாது.
தமிழக அரசின் மருத்துவ நிறுவனங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான தேவை இருக்கும் நிலையில், அவர்களை இப்போதுள்ள நிலையிலேயே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு எப்போது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறதோ, அப்போது இவர்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து பணி நிலைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G