அன்று முதல் இன்று வரை- இ. பழனிச்சாமியின் பயணம்

Last Updated : Feb 16, 2017, 01:53 PM IST
அன்று முதல் இன்று வரை- இ. பழனிச்சாமியின் பயணம் title=

சேலம் மாவட்ட சிலுவம்பாளையத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்து முதல்வர் நாற்காலியில் அமர உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பயணத்தை தெரிந்து கொள்வோம்.

அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 62 வயதாகிறது. சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ. படித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பகவுண்டர்-தவுசாயம்மாள் தம்பதியரின் கடைக்குட்டியாக பிறந்தவர் பழனிச்சாமி. 

1983-ம் ஆண்டில் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தவர், சிலுவம்பாளையம் கிளைச்செயலாளராக உயர்ந்தார். 1986-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிலுவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு, டெபாசிட்டை பறி கொடுத்தார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1987-ம் ஆண்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் பழனிச்சாமி. அப்போது பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்தியது.

1989-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதியில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார். 

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். 2001-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எடப்பாடி தொகுதி சென்றது. மீண்டும் 2004-ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு 2006 தேர்தலில் மீண்டும் எடப்பாடி சட்டசபை தொகுதியில் வாய்ப்பு கிடைத்தும் தோல்வியடைந்தார்.

மீண்டும் 2011-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் சீட்டும் வாங்கி வெற்றியும் பெற்றார் பழனிச்சாமி. தினசரி கோடிகள் புழங்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக மாறி உயர்ந்தார் பழனிச்சாமி.
 
ஜெயலலிதா கடந்த ஆட்சிகாலத்தில் உருவாக்கிய ஐவரணியில் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய பங்கு வகித்தார். 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார். 

ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதே அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அடிபட்டது. ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஒ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.

சசிகலா, ஒ. பன்னீர்செல்வம் இடையேயான பதவி சண்டையில் இரு அணிகளாக அதிமுக உடைந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சசிகலாவின் முதல்வர் ஆசையை அஸ்தமனமாக்கியுள்ளது.

இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவிக்கு முன் மொழிந்தார் சசிகலா. எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

இப்போது சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் பலம் இருப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தார். 
அவரை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இடன் மூலம் இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

Trending News