தமிழ்நாட்டில் 4 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்காக ஏற்ப்படுத்தப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது:-
தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 4 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. 4 பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாக தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி எஸ்.பி. இளங்கோவன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரும், பல்கலை. மானியக்குழு முன்னாள் தலைவருமான முனைவர் வேத் பிரகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல், வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவில், பெங்களூரிலுள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் இயக்குனர் முனைவர் எஸ்.சி. சர்மா, ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி விஸ்வநாத் ஷெகாங்கர், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் சுதீந்திரநாத் பாண்டா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் கடைசி இருவரும் பணி நிமித்தமாக தமிழகத்தில் இருப்பவர்கள் என்ற போதிலும், பூர்வீக அடிப்படையில் மூவருமே வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவில் ஒதிஷா மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ஸ்ரீகாந்த் மொகபத்ரா ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
துணைவேந்தர் தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், குடிமைப்பணி நிர்வாகிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோரின் தகுதி, நேர்மை மற்றும் பின்னணி குறித்து எந்த வினாவும் எழுப்ப நான் விரும்பவில்லை. நான் அறிந்தவரை அவர்களில் பெரும்பாலோர் அப்பழுக்கற்ற பின்னணி கொண்டவர்கள் என்பதால், அது ஒரு பிரச்சினையும் இல்லை. துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கான தகுதி கொண்ட கல்வியாளர்களோ, குடிமைப்பணி அதிகாரிகளோ தமிழகத்தில் இல்லையா? அத்தகைய தகுதி கொண்டவர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்பது தான் எனது வினாக்கள்.
தமிழக ஆளுனராகவும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பிறகு தான் இந்த புதியக் கலாச்சாரம் பிறந்திருக்கிறது. இதற்கு முன் கடந்த 15 மாதங்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக்குழுக்களிலும் வெளிமாநில கல்வியாளர்கள் உறுப்பினர்களாக அமர்த்தப்பட்டனர். இது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
கடந்த 12 ஆண்டுகளில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு தகுதியற்ற பலர் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னணியில் நேர்மையற்ற தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய தவறுகள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் வெளிமாநிலங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் தேர்வுக்குழுவில் சேர்க்கப்படுகிறார்கள் என்று ஆளுனர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமானால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு அற்புதமான துணைவேந்தர்கள் பலர் நேரடியாகவும், தேர்வுக்குழுக்கள் பரிந்துரை மூலமாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தேர்வு செய்தவர்கள் தமிழக ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் தானே தவிர, வெளிமாநிலங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் இல்லை என்பதை நினைவூட்டுகிறேன்.
இந்தியாவின் எந்த மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்வுக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவரை நியமிக்கும் வழக்கம் இல்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேர்வுக்கு மட்டும் பிற மாநிலத்தவரைக் கொண்ட குழு ஏற்படுத்தினால் அது தமிழக உயர்கல்விச் சூழலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான, தரமான துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் தேர்வுக்குழுவில் அப்பழுக்கற்ற, உயர்கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட, நேர்மையான கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டுமே தவிர, வெளிமாநில கல்வியாளர்களை சேர்ப்பது பயனளிக்காது.
தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் அனைவருமே நேர்மையற்றவர்கள்... வெளிமாநிலத்தவர்கள் அனைவருமே மிகவும் நேர்மையானவர்கள் என்ற சிந்தனையே தவறானது... இழிவானது ஆகும். இந்த சிந்தனை பல்கலைக்கழக மட்டத்தில் பரவினால் உயர்கல்வியை முற்றிலுமாக சீரழித்து விடக்கூடும்.
எனவே, தமிழக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேர்வுக்குழுவில் வெளிமாநிலத்தவரை நியமிக்கும் கலாச்சாரத்திற்கு ஆளுனர் முடிவு கட்ட வேண்டும். மாறாக, தமிழகத்தைச் சேர்ந்த அப்பழுக்கற்ற கல்வியாளர்களைக் கொண்டு துணைவேந்தர் தேர்வுக்குழுக்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.