திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன!!
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்று சட்டதிருத்தத்திற்க்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. இதன் நிறைவு விழா திருவள்ளூரில் நடந்தது. அப்போது பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று முடிவு செய்து இப்பணியை தொடங்கினோம். ஆனால் கையெழுத்து படிவத்தின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிவிட்டது. மக்கள் உண்மைகளை புரிந்துகொண்டு இந்த கொடுமைகளை தெரிந்துகொண்டு அவர்களாகவே முன்வந்து கையெழுத்துகளை போட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.
திமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கம் மூலம் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இந்த கையெழுத்து படிவங்களை, டெல்லிக்கு அனுப்பும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி,வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படிவங்கள் வரும் 19 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.