அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்தது உச்சநீதிமன்றம்!!
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி டிடிவி. தினகரன் ஆதரவாளர்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய எம்எல்ஏக்கள் மீது, அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக சார்பில் பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் 3 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கைக்கு தடைகோரி, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. இது தொடர்பாக முன்பு ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூற உள்ளது. பெருவாரியான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது. எனவே சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சபாநாயகர் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.