அதிமுக அரசு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படும் :ஸ்டாலின்

அடக்குமுறையும், அராஜகமும் தொடர்ந்து செய்து வரும் அதிமுக அரசு ஒரு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2018, 06:28 PM IST
அதிமுக அரசு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படும் :ஸ்டாலின் title=

அடக்குமுறையும், அராஜகமும் தொடர்ந்து செய்து வரும் அதிமுக அரசு ஒரு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என்று அனைவரையும் போராட்டக்களத்தில் தள்ளி விட்டு, கோட்டையில் அமர்ந்து “கமிஷன்” “கரப்ஷன்” “கலெக்‌ஷன்” போன்றவற்றில் மட்டுமே தீவிரமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு பிடித்தம் செய்த 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிலுவைத் தொகையை, பணியாளர்களின் வங்கிக் கணக்கில் போடாதது, 01.12.2017-க்குப் பிறகு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பத்து மாதங்களாக எந்தத் தொகையும் வழங்காதது, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் குறைந்து கொண்டே போவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. உள்ளிட்ட பத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் பல கட்டங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று “கோட்டையை நோக்கி” பேரணி செல்வதற்கு முற்பட்டு அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் “ஜாக்டோ - ஜியோ” அமைப்பைச் சார்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறப் போகும் மிகப்பெரிய போராட்டத்திற்கு முன்னோட்டமாக இன்றைக்கு அவர்களும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோர் தங்களின் கோரிக்கைகளை தொடர்ந்து பல கட்டங்களில் வலியுறுத்தி, அதற்காகப் போராட்டம் நடத்தியும் இந்த அரசு செவி கொடுத்து கேட்பதில்லை. அதற்குப் பதிலாக அடக்குமுறைகளை ஏவி விடுவது, சம்பளத்தைப் பிடிப்பது, கைது செய்வது போன்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்துகிறது.

நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கூட, “வாக்குறுதிகளை” வழங்கி விட்டு போராட்டங்களை வாபஸ் பெற வைத்து விட்டு, பிறகு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கை விரித்து - மீண்டும் போராட்டக் களத்திற்கே திருப்பி அனுப்பும் அராஜகமான நடவடிக்கையில் அ.தி.மு.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஆசிரியர்கள் சம்பளம் வாங்குவதை கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் பேசுவதும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அநாகரிகமாக கேலி செய்வதும் இந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் பழகிப் போன பண்பாடற்ற செயலாக மாறி விட்டது. அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களை - அவர்கள் அனைவரும் நிர்வாகத்தின் நிரந்தரமான அங்கங்கள் தானே என்றெண்ணி - அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நல்ல மனமும் இல்லை; அதற்கான மார்க்கத்தையும் கண்டுபிடிப்பதில்லை.

முதலமைச்சர், அமைச்சர்களின் கவனம் எல்லாம் “இன்றோ நாளையோ”என ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த சட்டவிரோத ஆட்சிக் காலத்தில் பினாமி பெயர்களில் எத்தனை “கம்பெனிகளை” உருவாக்கி எப்படியெல்லாம் “கமிஷன் அடிப்பது, சம்பந்திகளையும், சகோதரர்களையும் அரசு கஜானாவைச் சுரண்ட விடுவதற்கு எப்படி “நூதன டெண்டர்களை” விடுவது என்பதில் மட்டுமே முழுக்கவனமும் செலுத்தி - தமிழ்நாட்டின் அனைத்துத் துறை முன்னேற்றத்தையும் அணை போட்டுத் தடுத்து வருகிறார்கள்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில், அவர்களுக்குரிய அன்றாட அரசுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியர்களின் பணி மகத்தானது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு போக்குவரத்து தொழிலாளர்களின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. எதற்கு எடுத்தாலும் போட்டித் தேர்வுகள் என்ற “பா.ஜ.க. அரசின்” சமூக நீதிக்கு விரோதமான மனப்பான்மையால், ஆசிரியர்களின் பணி மாணவர்களுக்கும் - இளைஞர் சமுதாயத்திற்கும் மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

ஆனால், இதுபற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் “திட்டமிட்டு” அவர்களை எல்லாம் வீதியில் இறங்கிப் போராட வைத்து - தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் “சேடிஸ்ட்” மனப்பான்மையுடன் அ.தி.மு.க அரசு செயல்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபடுவோரை - அல்லது போராடப் போகிறோம் என்று முன்கூட்டியே முறைப்படி அறிவிப்பவர்களை அழைத்துப் பேசி ஒரு சுமூகத் தீர்வு காண்பதற்கு இந்த அரசுக்கு வக்கும் இல்லை - அதற்குரிய நிர்வாகத் திறமையும் அறவே இல்லை என்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவாக அமைந்து விட்டது. அரசு ஊழியர்களின் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய தலைமைச் செயலாளரோ “சம்பளத்தைப் பிடிப்போம்” என்று கெடுபிடி செய்து மிரட்டுவதிலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமர்ந்து தி.மு.க.வை விமர்சிக்கும் முதலமைச்சரின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி ரசிப்பதிலும் மும்முரமாக இருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்றே கருதுகிறேன்.

ஆகவே, இனியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டக் களத்திற்கு விரட்டி அடிக்காமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையும், அராஜகமும் “அணையப் போகும்” தீபத்தின் கடைசி அடையாளங்கள் என்பதை, எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டிய அ.தி.மு.க அரசினை தாறுமாறாக வழி நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி உணர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News