அதிமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு பேராபத்து -ஸ்டாலின் அறிக்கை

“ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஊழலை” ” பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் வெளியிடக்கூடாது என மிரட்டுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2018, 07:35 PM IST
அதிமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு பேராபத்து -ஸ்டாலின் அறிக்கை title=

“ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஊழலை” ” பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் வெளியிடக்கூடாது என மிரட்டுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

“ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஊழலை” வெளியிடக்கூடாது என்று ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அமைச்சரவையில் நடைபெற்று வரும் ஊழல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சிகளையும் மிரட்டுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் “மின்னணு நிர்வாகம்” மற்றும் “மொபைல் ஆப்” உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத “மெட்டல் ஷீட்” தயாரிக்கும் நிறுவனத்தைப் பங்கேற்க வைத்து, அந்த டெண்டரை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணவப்போக்குடன் அதிகாரத் திமிரில் செயல்படுவது மட்டுமின்றி, இப்போது பத்திரிக்கைகளையும் ஊழல் செய்திகளை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவதும், எச்சரிப்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள பேராபத்து என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் டெண்டரில் பங்கேற்ற “ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி” இதுவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதையும் செய்த முன் அனுபவம் இல்லை என்பது அந்தக் கம்பெனியின் இணைய தளம் மூலமே தெளிவாகத் தெரிகிறது. அந்த தனியார் கம்பெனியின் இணையதளத்தில் “இயந்திரங்கள் தயாரிப்பது தான் எங்களது முக்கியமான தொழில்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி அனுபவமே இல்லாத இந்த கம்பெனிக்கு சென்னை மாநகரத்தின் “ஸ்மார்ட் சிட்டி” மின்னணு நிர்வாகம் தொடர்பான 149 கோடி ரூபாய் டெண்டர் ஏற்கனவே எப்படி வழங்கப்பட்டது?

அந்த முறைகேடு போதாது என்று டுபிட்கோ டெண்டரில் உள்ள பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் “மின்னணு நிர்வாகம்” தொடர்பான ஒப்பந்தங்களையும் இந்த தனியார் கம்பெனிக்கே கொடுக்க அமைச்சர் இப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்வதுதான் ஊழலின் உச்சகட்டம்!

பத்து ஸ்மார்ட் சிட்டி டெண்டரைப் பொறுத்தமட்டில் கேரள மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான “கெல்ட்ரான்” நிறுவனம் தான் விலை குறிப்பிட்டதில் (“ரேட் கோட்” பண்ணியதில்) இரண்டாவதாக வந்திருக்கிறது. ஆனால், அமைச்சரின் இந்த பினாமி கம்பெனி ஏன் “டெண்டரை டெண்டர் கமிட்டி மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கோருகிறது?

அந்தக் கோரிக்கையின் பின்னணியிலும், அந்த டெண்டரில் இந்த தனியார் கம்பெனிக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் தான், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு கார்த்திகேயன் டுபிட்கோவின் “தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்” பொறுப்பில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் அப்பட்டமான ஊழல், ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் பொங்கி வழிகிறது. “குறைந்த ரேட்” கொடுத்துள்ள கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்ற டெண்டர் சட்ட விதிகளை மீறி, அதிக ரேட் போட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் கம்பெனிக்கு “ஸ்மார்ட் சிட்டி பணிகளை” கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் இவ்வளவு குளறுபடிகளை அமைச்சர் திட்டமிட்டு நடத்துகிறார்.

ஆனால், ஊழலுக்கு பதில் சொல்ல முடியாத உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி வேலுமணி பத்திரிக்கைகளை, செய்தி போடக்கூடாது என்று மிரட்டுவது கோழைத்தனமாகும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி பணிகள் படு மோசமாக முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. இந்த லட்சணத்தில் “மெட்டல் சீட்” கம்பெனிக்கு “மின்னணு நிர்வாகம்” தொடர்பான ஸ்மார்ட் சிட்டி பணிகளை வழங்க அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி நடத்தும் “ஊழல் திருவிளையாடல்கள்” சந்தி சிரிக்கிறது.

நகராட்சிப் பணிகள், எல்.ஈ.டி. கான்டிராக்டுகள் அனைத்தும் அமைச்சரின் பினாமிகளுக்கோ அல்லது அவரது பினாமிகள் இடம்பெற்றுள்ள கம்பெனிகளுக்கோ கொடுக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளாட்சித் துறை எல்லாம் அமைச்சர் திரு வேலுமணிக்கே சொந்தமான “தனியார் லிமிடெட் கம்பெனிகள்” போல் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள எல்.ஈ.டி. விளக்குகள் பொருத்தும் கான்டிராக்ட் உள்ளாட்சித் துறை அமைச்சரின் இந்த பினாமி தனியார் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைவிட கோவை மாநகராட்சியில் கொத்துக் கொத்தாக அமைச்சர் திரு வேலுமணி பினாமிகளின் ஊழல்கள் கரங்கோர்த்து அணிவகுத்து நிற்கின்றன.

ஸ்மார்ட் சிட்டியைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு 50 சதவீத நிதியும், மாநில அரசு 50 சதவீத நிதியும் செலவழிக்கிறது. ஆகவே, மத்திய அரசு நிதி செலவிடப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் ஏன் தட்டிக் கேட்காமல் இருக்கிறது?

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் அமைதி காப்பது ஏன்? “ஸ்மார்ட் சிட்டி திட்டம்” பிரதமரின் முன்னோடித் திட்டமாக இருந்த போதிலும் இத்திட்டத்தை கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாக எழுகின்றன.

ஆகவே, நான் ஏற்கனவே கோரிக்கை வைத்தபடி “நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி” ஒருவர் தலைமையில் டுபிட்கோ ஸ்மார்ட் சிட்டி டெண்டர் மட்டுமின்றி, அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் இதுவரை விடப்பட்டுள்ள அனைத்து டெண்டர்களையும் விசாரிக்க ஒரு “சிறப்பு விசாரணைக் குழு” அமைத்து, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் திரு வேலுமணி மீதும், அவருக்குத் துணை போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே, தன் துறையில் தன் உறவினருக்கே கான்டிராக்டுகளை வழங்கிய ஊழல் வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரால், அமைச்சர் திரு வேலுமணியின் துறை டெண்டர்களை விசாரிக்க முடியாது என்றால், மத்திய அரசு நிதியும் இதில் இருக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News