ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு - அதிமுக புறக்கணிப்பு..!

Erode East by election | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக சந்திரக்குமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக தேர்தலை புறக்கணிக்கிறது என அறிவிப்பு

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 11, 2025, 09:17 AM IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
  • திமுக இம்முறை நேரடியாக போட்டி
  • வி.சி.சந்திரக்குமார் போட்டியிடுவார் என அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு - அதிமுக புறக்கணிப்பு..! title=

Erode East by-election, DMK Candidate | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இம்முறை திமுக போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வி.சி. சந்திரக்குமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு திமுக தலைமைக்கு வி.சி. சந்திரக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் திமுக போட்டியிடுவதை முழு மனதுடன் ஏற்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் உடல் நலக்குறைவாக டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என திமுக கூட்டணி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஏனென்றால் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. திமுகவும் 2021 சட்டமன்ற தேர்தல், அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தது. இம்முறை திமுகவே அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட முடிவெடுத்து, திமுக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச்செயலாளர் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: களத்தில் குதிக்கும் திமுக... ஒதுங்கிய காங்கிரஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி ரியாக்ஷன்

காங்கிரஸ் கட்சி இம்முறையும் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய அக்கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு போட்டியிட திமுக கூட்டணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. இது குறித்து ஆலோசனை நடத்திய திமுக, இம்முறை அங்கு போட்டியிட விரும்புவதை கூறியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட விரும்புவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து மாநில மற்றும் தேசிய தலைமையுடன் ஆலோசனை நடத்திய பிறகு திமுக போட்டியிட காங்கிரஸ் ஆதரவளிக்கும் என கூறியுள்ளார். 

திமுக போட்டியிடுவது ஏன்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடுவது ஏன்? என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் சட்டசபை தேர்தலுக்கு 18 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு தயார்படுத்திக் கொள்ளவும், திமுக அரசு மீது மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த இடைத்தேர்தலை திமுக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஒருவேளை போட்டியிட்டு மிகப்பெரிய தோல்வியை தழுவினால் அது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News