Tirupati | திருப்பதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு யாரெல்லாம் செல்லக்கூடாது என்ற தகவலை மிக முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள்.
Tirupati Vaikuntha Ekadashi | வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதி திருமலையில் நடக்கும் சிறப்பு வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு யாரெல்லாம் செல்லக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா (Tirupati Vaikuntha Ekadashi) வெகுவிமரிசையாக தொடங்கியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதியான இன்று பிற்பகல் 12:22 மணிக்கு வைகுண்ட ஏகாதசி திதி தொடங்கியது.
ஜனவரி 10, 2025 அன்று காலை 10:19 மணி வரை இந்த திதி இருக்கும். இதனையொட்டி அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு (Sorgavaasal) திருப்பதி திருமலை உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் வெகு சிறப்பாக நடக்கும்.
திருப்பதியில் ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது. இதனையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய நிகழ்வான தங்க தேரோட்டம் திருப்பதி திருமலையில் 10 ஆம் தேதி நடக்கிறது.
சக்கர ஸ்நானம் ஜனவரி 11 ஆம் தேதியும் நடக்கிறது. மொத்தம் 10 நாட்கள் திருப்பதி திருமலையில் சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 19 ஆம் தேதி வரை பக்தர்கள் பெருமாளை தரிசிக்கலாம்.
சொர்க்க வாசலும் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி திதி நாளில் பெருமாளின் சொர்க்க வாசல் வழியாக செல்லும்போது, வெங்கடாஜலபதி அருளால் நேரடியாக சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.
இதனையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பதி திருமலையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் கூட்ட நெரிசலால் திருப்பதி திருமலை திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
இலவச தரிசன டிக்கெட் வாங்க கிலோ மீட்டர் தொலைவு கணக்காக மக்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி நான்கு பக்தர்கள் உயிரிழந்த சோக செய்தியும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சொர்கவாசல் விழாவுக்கு முன்பே திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கையாக கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் முதியோர்கள் யாரையும் அழைத்து வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், உடல் நல குறைபாடு இருப்பவர்களும் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் திருப்பதிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்
தங்கும் விடுதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான தகவல் மையம் அனைத்தும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இப்போது ஏற்பட்டிருக்கும் அசாம்பவிதத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு மலை மீது அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஒலிப்பெருக்கிகள் மூலம் முன்னெச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.