DIG Vijayakumar: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று (ஜூலை 7) காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் காவல் அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி மன அழுத்தத்தில் இருப்பது குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர், முன்னரே டிஐஜி விஜயகுமாரையும், அவரது மனைவியையும் அழைத்து ஐஜி அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரம் பேசியுள்ளார் என கூறப்படுகிறது. அப்போது மன அழுத்தம் குறித்து கேட்டறிந்த அவர் அதில் இருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தொடரும் தமிழக காவல் துறையினரின் தற்கொலைகள்..! என்ன காரணம்..? தீர்வு எப்போது..?
இதேபோல், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் டிஐஜி விஜயகுமாரிடம் பேசி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஓசிடி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டிஐஜி ஒரே மருத்துவரை பார்க்காமல், மாற்றி மாற்றி பார்த்து மருந்து எடுத்து வந்துள்ளார். அது தொடர்பாக இணையதளத்தில் நிறைய குறிப்புகள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
அவருடைய மகள் மருத்துவம் படிப்பதற்கு தயார் செய்துவிட்டதாகவும் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 2 நாளுக்கு முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, காவல் துறையில் இல்லாத ஒரு நண்பரிடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. அவரும், டிஐஜி விஜயகுமாரும் ஆனைகட்டிக்கு போவதாக திட்டமிடப்பட்டு, நண்பர் வரவில்லை என்பதால் போக முடியவில்லை என கூறப்படுகிறது.
அவர் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவே அதாவது பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது தனது தனி பாதுகாவலரிடம் துப்பாக்கி எல்லாம் எங்கே வைப்பீங்க, பத்திரமாக இருக்கிறதா என கேட்டு பார்த்துள்ளார். மேலும், அந்த இடத்தை சென்று பார்த்தும் உள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் அங்கு சென்று துப்பாக்கியை கேட்டு வாங்கி வந்து தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் டிஐஜியிடம் துப்பாக்கி கொடுத்த காவலர் மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகுமார், குரூப் 1 தேர்வு எழுதி 2003ஆம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி 2009ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் தேர்வில் தேர்வாகி, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் சிபிசிஐடி எஸ்.பியாக பணியாற்றியுள்ளார்.
இவர் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த போது அரும்பாக்கத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் பிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதத்தில் பணிப் பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்தவர்.
மேலும் படிக்க | எந்த டிஐஜி-க்கும் மன அழுத்தம் இருக்க வாய்ப்பில்லை - எம்.ரவி பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ